×

நாசகார பொருளாதார கொள்கையால் கிராமம் மட்டுமின்றி நகரத்திலும் வேலையில்லா திண்டாட்டம்: மோடி மீது டி.ராஜா தாக்கு

கோபி: நாசகார பொருளாதார கொள்கையால் கிராமத்தில் மட்டுமின்றி நகரத்திலும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது’ என்று பிரதமர் மோடி மீது டி.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். கோபியில் உள்ள இந்திய கம்யூ. கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜவிற்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியை கொடுத்து இருக்கிறார்கள். பாஜ தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வில்லை. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்றோர் ஆதரவு காரணமாக கூட்டு ஆட்சி அமைந்து இருக்கிறது. இந்த ஆட்சி ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு என்ற முறையில் அமைந்து இருக்கிறது. அது நீடிக்க இயலாது.

சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ தோல்வி அடைந்துள்ளது. இனி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ தோல்வி என்பது உறுதியாகி உள்ளது. மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதோடு அந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கவில்லை. கிராமத்தில் மட்டுமின்றி நகரத்திலும் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. வேலை இல்லாத திண்டாட்டத்திற்கு காரணமே மோடி தலைமையில் உள்ள ஒன்றிய அரசு பின்பற்றிய நாசகார பொருளாதார கொள்கை தான். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். இவ்வாறு டி.ராஜா கூறினார்.

 

The post நாசகார பொருளாதார கொள்கையால் கிராமம் மட்டுமின்றி நகரத்திலும் வேலையில்லா திண்டாட்டம்: மோடி மீது டி.ராஜா தாக்கு appeared first on Dinakaran.

Tags : D. Raja ,Modi ,Gobi ,Indian Commune ,Dinakaran ,
× RELATED ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண்...