பல்லாவரம், ஜூலை 21: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியின் மதகுகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. பருவமழையின்போது இந்த ஏரி நிறைந்ததும், 5 கண் மதகு மற்றும் 19 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். நேற்றைய நிலவரப்படி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், ஏரியின் நீர் மட்டம் 14.84 அடி உயரமாகவும், மொத்த கொள்ளளவு 1502 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 310 கன அடியாகவும் இருந்தது.
பொதுவாக ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடியில், 22 அடி உயரத்தை எட்டினாலே பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் உள்பகுதியில் மதகுகள் முழுமையாக தெரியும் அளவிற்கு நீர் குறைந்து காணப்படுவதால், பருவ மழைக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் அதன் ஓரங்களில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க ரப்பர் சீல் மற்றும் மின் மோட்டார்கள், அளவு கோல் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிரேன் உதவியுடன் ஷட்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, 5 கண் மதகு கரைகளை பலப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என்று பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 5 கண் மதகு முழுமையாக சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது 19 கண் மதகை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு பருவ மழை அதிகளவு இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், சுமார் 10 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து வண்ணம் பூசும் பணிகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். இங்கு, 800 அடி நீளத்தில் 50 அடி உயரத்தில் மொத்தம் 16 ஷட்டர்களுடன் உள்ளன. இந்நிலையில், ₹9.48 கோடி மதிப்பில் 16 ஷட்டர்களையும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. ஷட்டர்கள் ஏற்றும் போதும், இறக்கும் போதும் எளிதில் இருக்கும் வகையில் ஆயில் சர்வீஸ், பெயின்டிங் மற்றும் கூடுதல் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகிறது.
The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், பூண்டி ஏரி ஷட்டர்கள் சீரமைப்பு: 10 நாட்களில் முடிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.