- பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கம்
- திருவள்ளூர்
- பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம்
- சென்னை
- தின மலர்
திருவள்ளூர், ஜூலை 21: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கம் 8,458 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1940ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு கிருஷ்ணா நிதி நீர் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர் ஆகியோர் கிருஷ்ணா நதிநீர் பெற ஒப்பந்தம் செய்தனர். ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 0 பாயிண்ட் வரை 152 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது. குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின் படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது. அதன்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆட்சியின் போது நீர்த்தேக்கங்களை சுற்றி உள்ள வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு மழை நீர் வீணாகாமல் நீர்த்தேக்கத்திற்கு வந்து சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மழை அதிக அளவில் பெய்யும் போது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவில் நீர் வந்து சேருகிறது. அதேபோல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவடப்படும் நீர், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் ஆகியவையும் பூண்டி நீர்த்தேக்கத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதனால் பூண்டி நீர் தேக்கமும் விரைவில் நிரம்பி விடுகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல், சோழவரம் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அதிக மழை காரணமாக நீர்வரத்து உயரும் என்பதால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு வரை 4 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2015ல் ஒரு லட்சம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் வருடம் தோறும் மழைக்காலங்களில் நீர் நிரம்பி விடுவதால் உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் வகையில் கட்டப்பட்ட நீர்த்தேக்கமானது 800 அடி நீளத்தில் 50 அடி உயரத்தில் மொத்தம் 16 ஷட்டர்களுடன் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் பூண்டி நீர்தேக்கம் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றிய நிலையில் 8, 9 ஆகிய 2 ஷட்டர்கள் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 2021ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகமாகி 8 மற்றும் 9 ஆகிய 2 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் பழுதடைந்த 8 மற்றும் 9 ஆகிய 2 ஷட்டர்கள் ரூ.2.12 கோடி மதிப்பில் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது மொத்தம் உள்ள 3,231 மில்லியன் கனடியில் 150 மில்லியன் கன அடிக்கும் குறைவாக நீர் இருப்பதாலும், ஆகஸ்ட் மாதத்தில் மழைக்காலம் தொடங்க இருப்பதாலும் பழுதடைந்த 8 மற்றும் 9 ஆகிய 2 ஷட்டர்களை சீரமைக்கவும் மேலும் கூடுதலாக ₹9.48 கோடி மதிப்பில் 16 ஷட்டர்களையும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷட்டர்கள் சீரமைப்பு பணியினை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி, உதவி செய்ய பொறியாளர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து பெரிய அளவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உபரி நீர் ஒரு லட்சம் கன அடி வீதம் திறக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இதனால் இனிவரும் காலங்களில் உபரி நீரை அதிக அளவில் வெளியேற்றும் நிலை வரும்போது பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் அந்த ஷட்டரை பலப்படுத்தும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி தெரிவித்தார்.
தற்போது நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அவை வீணாகாமல் இருக்கும் பொருட்டு, டேமின் அருகே தற்காலிகமாக கரை அமைக்கப்படுகிறது. மேலும் ஷட்டர்கள் ஏற்றும் போதும், இறக்கும் போதும் எளிதில் இருக்கும் வகையில் ஆயில் சர்விஸ், பெயிண்டிங் மற்றும் கூடுதல் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஷட்டர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி தெரிவித்தார்.
The post ₹9.48 கோடி மதிப்பீட்டில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் 16 ஷட்டர்களை சீரமைக்கும் பணி: செயற்பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.