×

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு அம்பலம்; பிரபல ரவுடி சாம்போ செந்திலை பிடிக்க 5 தனிப்படைகள்: வெளிமாநிலங்களுக்கு விரைந்தது

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பிரபல ரவுடி சாம்போ செந்திலை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளி மாநிலம் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேசின்தம்பி பொன்னை பாலு உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய நபர் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், நேரடியாக கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல வழிகளில் பண பரிமாற்றம் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக பாஜக மாஜி பிரமுகர் அஞ்சலையின் மூலம் சுமார் 10 லட்ச ரூபாய் வரை உதவி செய்யப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடியபோது தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்றிரவு அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கொண்டிதோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், பல வருடங்களாக ஆற்காடு சுரேசுடன் நெருங்கிய தொடர்பில் அஞ்சலை இருந்துள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்? யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள போலீசார் அவரது முக்கிய இரண்டு வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வியாசர்பாடி, ஓட்டேரியில் உள்ள வங்கிகளில் அஞ்சலையின் பண பரிவர்த்தனையை கேட்டு போலீசார் ஆய்வு செய்ததாக தெரிகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை அஞ்சலைக்கு தெரிந்தே நடந்துள்ளது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து தொடர்ந்து அஞ்சலையிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் போலீசார் சிலரை விசாரித்து வருவதாகவும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள பெரம்பூர் ரவுடி திருமலை என்பவரின் பங்கு என்ன என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பிரபல ரவுடிகள் சாம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆரம்பம் முதல் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 14 பேரிடம் இதுசம்பந்தமாக தீவிரமாக மேற்கொண்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சாம்போ செந்திலுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை தேடிவந்த நிலையில், சாம்போ செந்தில் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து சாம்போ செந்திலை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். மேலும் தனிப்படையினர் வெளி மாநிலங்களுக்கும் விரைந்துள்ளனர். சாம்போ செந்தில் கைது செய்யப்படும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு அம்பலம்; பிரபல ரவுடி சாம்போ செந்திலை பிடிக்க 5 தனிப்படைகள்: வெளிமாநிலங்களுக்கு விரைந்தது appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Sambo Senthil ,Perambur ,BSP ,president ,Bahujan Samaj Party ,Chennai Perampur ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சர்வதேச...