×

யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்துக்கு வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன்-போட்டித் தேர்வுப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 7.3.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்க தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், பத்தி எண்.78ல், இந்தத் திட்டத்தின் தொடர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (16.6.2024) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2024) யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 19ம் தேதி(நேற்று) முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UPSC ,Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu Skill Development Corporation ,Na Multuvan-Competitive Examination ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...