* வீணாகும் ஏரி நீர் பயிர் அழுகிட வாய்ப்பு
கதக் மாவட்டம், டம்பளா நகரில், துங்கபத்ரா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சிங்காடலூர் ஏதா பாசன திட்டத்தின் கீழ், பெரிய கால்வாய் மூலம், டம்பளா ஏரிக்கு பல நாட்களாக தண்ணீர் விடப்பட்டு வருகிறது. ஆனால், மதகை (கதவு) வளைவு காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்காமல் பள்ளம் மற்றும் சாலையில் வீணாகி வருகிறது. தாலுகாவில் பருவமழை துவங்கியதால், மழை மற்றும் ஏரி நீரை நம்பி விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஹெக்டேரில் தானியங்களை ஏற்கனவே விதைத்தனர். தற்போது தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் அழுகிவிடுமோ என்ற கவலை எழுந்துள்ளது. கோடை காலத்தில் ஏரி காலியாக இருந்தும், கதவணையை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் ஏரிக்கால்வாய் சீரமைப்பு மற்றும் இதர பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பசவராஜ பாண்டி கோரிக்கை விடுக்கிறார்.
* பேருந்து – கார் விபத்து 8 பேர் காயம்
தும்கூரு மாவட்டம், திப்த்துரு தாலுகாவில் உள்ள மனகிகெரே கிராமத்திற்கு சென்ற காரும், ஹோஸ்துர்காவில் இருந்து மைசூரு நோக்கி சென்ற பேருந்தும் துருவேகெரே தாலுகாவில் உள்ள மாயசந்திரா ஹோபாலி ஜோடுகாட் அருகே சென்ற போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பகுதி நசுங்கியது. அதில் பயணம் செய்த லாவண்யாசிங் (23), கோபால் சிங் (30), சிவகுமார் சிங் (45), லட்சுமிபாய் (40), சரஸ்வதிபாய் (70), சஹானா பாய் (50), துளசி பாய் (35), நான்கு வயது சினேகா ஆகிய 8 பேர் கார் காயமடைந்தனர். விபத்தை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.வி.அசோக், துருவேக்கரே பிஎஸ்ஐ சங்கப்பா மேட்டி, சிபிஐ லோகித் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது
மங்களூரு நகரின் கோடிக்கல்- விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகுந்த மர்ம நபர்கள், அந்த வீட்டில் இருந்த 80 கிராம் தங்கம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் வீடு திரும்பியதும், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், வெங்கடேஷ் (21), சாகர் (21), மற்றும் ரஞ்சித் (20) என்றும், பல திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவரிகளிடமிருந்து ரூ.4.65 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்வா போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* சிக்கபள்ளாபுராவில் 2023-24ம் ஆண்டில் வனவிலங்கு தாக்கி 43 மாடுகள் பலி
சிக்கபள்ளாப்புரா மாவட்டம் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. புதர்கள் அதிகம் உள்ள மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, மயில், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. சிறுத்தைப்புலி தாக்குதல் சம்பவங்கள் தற்போது அதிகளவில் பதிவாகி வருகின்றன. சமீபத்தில் சிக்கபள்ளாப்புரா தாலுகாவில் உள்ள நந்தி கிராமம் அருகே சிறுத்தை ஒன்று கோழிகளை தாக்கி கொன்றது. கடந்த 2023-24ம் ஆண்டில் சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் வன விலங்குகள் தாக்கி 43 மாடுகள் இறந்தன. கௌரிபிதனூர் தாலுகாவில் அதிகபட்சமாக வழக்குகள் பதிவாகியுள்ளன. வன விலங்குகள் தாக்கி இறந்த மாடுகளுக்கு இழப்பீடாக ரூ. 4.91 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் வயல்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. 2023-24ம் ஆண்டில், வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்ததற்காக மாவட்ட வனத் துறையிடம் 123 விவசாயிகள் விண்ணப்பித்து ரூ. 12,51,389 இழப்பீடு பெற்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செய்தி கதம்பம் appeared first on Dinakaran.