×

ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மீனவக் குடும்பத்தினர் பங்கேற்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்யும், இலங்கை கடற்படையை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், திமுக, காங்கிரசைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 74 மீனவர்களை கைது செய்து, 8 விசைப்படகுகள், 4 நாட்டுப் படகுகளை பறிமுதல் செய்துள்ளது. மீனவர்கள் அனைவரும் அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒராண்டு, இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை பெற்று 6 மீனவர்கள் பல மாதங்களாக சிறையில் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 170க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

இதனிடையே, சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல, ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் இருநாட்டு மீனவர்களும் பிரச்னை இல்லாமல், மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அந்த நாட்டு சிறையில் வாடும் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பஸ்நிலையம் முன்பு இன்று காலை அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ‘தமிழக மீனவர் பிரச்சனையை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் முன்னிலை வகித்தார். இதில் திமுக மாவட்ட கழக செயலாளர், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருமாணிக்கம், ராஜேஷ்குமார் உள்ளிட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பினர், மீனவ சங்க பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவரும் கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

The post ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மீனவக் குடும்பத்தினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : EU ,MBIs ,RAMESWARAM ,FISHERMEN ,RAMESWAR ,UNION GOVERNMENT ,SRI LANKAN ,NAVY ,Dimuka ,Tamil Nadu ,EU Government ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில்...