×

4 தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்: அழகர்கோவில் ஆடித் திருவிழாவில் பங்கேற்க காரைக்குடியில் இருந்து மாட்டுவண்டி பயணம்

மேலூர்: அழகர்கோயில் ஆடித் திருவிழாவில் பங்கேற்க, காரைக்குடியில் இருந்து மாட்டுவண்டி பயணமாக மேலூர் வந்த நாட்டார்கள், இன்று மதியம் கோயிலுக்குச் செல்கின்றனர். நாளை 100 கிடாக்களை வெட்டி உறவினர்களுக்கு கறிவிருந்து படைப்பர். நான்கு தலைமுறையாக இந்த பாரம்பரியம் தொடர்வதாக தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோ.வேலங்குடி கிராமத்தை சேர்ந்த நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் மதுரை மாவட்டம், அழகர்கோயில் ஆடித் திருவிழாவில் பங்கேற்க மாட்டுவண்டிகளில் வந்து செல்கின்றனர்.

இந்தாண்டு அழகர்கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க கோ.வேலங்குடியைச் சேர்ந்த நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் நேற்று முன்தினம் புறப்பட்டு நேற்று மேலூர் வந்தடைந்தனர். இவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் அழகர்கோயில் சென்றடைகின்றனர். அங்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு ராக்காயி அம்மன் கோயிலில் தீர்த்தமாடி விட்டு கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பசுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

நாளை 100க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விருந்து உபசரிப்பு செய்கின்றனர். வேலங்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அழகர்கோயிலில் நடக்கும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியமாக மாட்டுவண்டி கட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நாளை மறுதினம் (21) தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புகின்றனர். இந்த பாரம்பரியம் நான்கு தலைமுறையாக தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

The post 4 தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்: அழகர்கோவில் ஆடித் திருவிழாவில் பங்கேற்க காரைக்குடியில் இருந்து மாட்டுவண்டி பயணம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Alagarkoil Adith festival ,Melur ,Alagharkoil Adith festival ,Sivagangai… ,
× RELATED கொற்றவனுக்கு அருளிய கொற்றவாளீஸ்வரர்