×
Saravana Stores

வங்கதேசத்தில் அரசு தொலைக்காட்சி தலைமையகம் தீ வைத்து எரிப்பு: இடஒதுக்கீடு தொடர்பாக தொடரும் வன்முறையால் பரபரப்பு

டாக்கா: வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை தீவிரமடைந்து வருகிறது. அங்குள்ள அரசு தொலைக்காட்சி தலைமையகம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனையடுத்து வங்கதேசம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி வருகின்றனர்.

தாங்கள் எந்த அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அனைவருக்கும் நியாயமான தகுதி அடிப்படையில் வேலை கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதேசமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர், இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 15 போலீசார் உள்பட 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அந்த பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள், அரசு தொலைக்காட்சி தலைமையகத்தை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் தொலைக்காட்சி தலைமையகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இந்த வன்முறையில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர போலீசாருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று அறிவித்துள்ளது. அதற்கு போராட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது’ என குறிப்பிட்டிருந்தது.

The post வங்கதேசத்தில் அரசு தொலைக்காட்சி தலைமையகம் தீ வைத்து எரிப்பு: இடஒதுக்கீடு தொடர்பாக தொடரும் வன்முறையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Dinakaran ,
× RELATED வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக்...