×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

மருத்துவ கலைச்சொற்களை பயன்படுத்தலாமா?

எனக்கு மூட்ஸ்விங்கா இருக்கு, நான் டிப்ரெஸன்ல இருக்கேன், நான் ஆன்க்ஸியஸா இருக்கேன் என்று பெண்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அதே போல், நான் ஒரு சைக்கோ, நான் ஒரு நார்சிஸ்ட், நான் ஒரு அப்நார்மல் பெர்சன் என்றும் கூறும் ஆண்களையும் பார்த்தும் இருக்கிறோம். இம்மாதிரியான மனநல மருத்துவத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை நமக்குத் தெரிந்தவர்கள் பயன்படுத்துவதால், அவர்கள் அனைவரும் மனநலப் பிரச்னைகளில் இருப்பவர்களா என்று கேட்டால், வீட்டிலுள்ளவர்கள், நண்பர்கள் அனைவரும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திரும்பி நம்மையே பார்ப்பார்கள்.

நீங்கள் பேசுவதைப் புரியாமல், ஏன் வீட்டிலுள்ளவர்கள் முழிக்கிறார்கள் என்றால், நாம் அனைவரும் வார்த்தைகளைப் பார்த்து பயப்படும் நபர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதுவும் நோயின் அடிப்படையில் இருக்கும் வார்த்தைகளை உச்சரிக்கவே ஆயிரம் தடவை யோசிக்கும் நபர்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஏனென்றால், தன்னை ஒரு நோயாளி என்று கூறி விட்டால் அல்லது அடிக்கடி உடம்புக்கு முடியல என்று கூறுவதை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் யோசிக்கும் தலைமுறையைத்தான் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு அவை எல்லாமே முற்றிலும் மாறி விட்டது.

அதற்கேற்ற மாதிரி காலநிலை மாற்றத்தால், உடலுக்கு அடிக்கடி முடியாமல் போவது என்று சிறுவர் சிறுமியரில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தனக்கு உடம்புக்கு சரியில்லை என்ற வார்த்தையை எளிதாக பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இந்த டிஜிட்டல் உலகில், இன்னும் முன்னேறி, உணர்வுகளை கையாளத் தெரியவில்லை என்றாலும் கூட, மனநலம் சார்ந்த வார்த்தைகளை உடனுக்குடன் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு விதத்தில் ஒரு மனநல ஆலோசகராக நல்லதுதான் என்றாலும், தும்மினால் கூட உடலுக்கு முடியவில்லை என்று சொல்வது போல், சும்மா அழுதால் கூட, டிப்ரெஸன்ல இருக்கேன் என்று கூறுவதைப் பார்க்கும் போது தான், கொஞ்சம் பயமாக இருக்கிறது.

டிப்ரசன்ல இருக்கேன் என்று யாராவது கூறும் போது, உண்மையாகவே அவர்களுக்கு மனம் சார்ந்த பிரச்னையா என்று கேள்வி கேட்டால், ஏன் நாம் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல், அமைதியாக இருக்கிறார்கள் என்று யோசித்து இருக்கீங்களா? உண்மையில், நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு உடலில் ஏதும் நோய் என்றால், கண்ணால் பார்த்து, அதனால் ஒரு நபர் எந்தளவிற்கு அவதிப்படுகிறார் என்றும், அதனால் ஏற்படும் வேதனையைப் புரிந்து கொண்டு, இத்தனை நாட்களுக்குள் அல்லது இத்தனை மாதங்களுக்குள் சரியாகி விடும் என்று கூறியே பழக்கப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் கடந்த 2000 வருடத்தில் இல் இருந்து மட்டுமே பழக்கப்பட்ட மனநல மருத்துவத்துறையில் பயன்படுத்தும் வார்த்தைகளை, திடீரென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் அடிக்கடி பேசும் போது, அதன் தீவிரத்தையும், வீரியத்தையும் புரிந்து கொள்ள முடியாமல், நம் வீடும், கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களும் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

ஏனென்றால், நம் சமூகத்தில், வரலாற்றில் வாழ்ந்த நம் முப்பாட்டன்கள் அனைவரும் இயல்பாக கோபப்படுவது, அழுவது, கத்துவது, பிரிவது, அதன் பின் உறவுகளிடம் சேர்வது, அவமானப்படுவது, வெற்றியடைவது, தனியாக இருப்பது என்று அனைத்தையும் மிகமிக இயல்பாக செய்து கொண்டு, ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று அப்படி ஒரு நபர் தன் வீட்டிலோ அல்லது சமூகத்திலோ தனியாக தங்கள் உணர்வுகளை இயல்பாகக் காட்ட முடியாது.

சிறந்த எழுத்தாளரான யுவால் நோவா ஹராரி அவர்கள் எழுதிய ஹோமோசேப்பியன்ஸ் புத்தகத்தில் கூறியிருப்பார். இன்றைய நவீன மனிதர்கள் என்றுமே மனதளவிலும், உடல் அளவிலும் கொண்டாட்ட உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் மட்டுமே வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அதனால் வலியில்லாத வாழ்க்கையை மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறியிருப்பார். அதற்கு ஏற்றார் போல், உடல்நல சிகிச்சையில் இன்று வலியில்லாத ஆப்ரேசன் என்று பலவிதங்களில் உருவாக்கப்பட்டு, அதனால் பயனடைந்த மனிதர்களுக்கு, மனதளவில் ஏற்படும் வலியை முற்றிலும் ஏற்க தயாராக இல்லை.

நம் வாழ்வில் ஏற்படும் சிறு ஏமாற்றம் என்றாலும் அல்லது தனக்குப் பிடித்த மாதிரி அமையாத சிறு விஷயமென்றாலும் மனம் ரொம்ப ஏங்கித் தவிக்க ஆரம்பிக்கிறது. தனக்கு மட்டுமே இந்த உலகில் மிகப்பெரிய கஷ்டம் என்பது போல் நினைக்கத் தொடங்கி விடுகிறது. அதன் விளைவாக, மனநலம் சார்ந்து அடிக்கடி பேசவும் தொடங்கி விட்டார்கள்.

அதிலும் இன்னும் படித்தவர்கள், இன்றைக்கு உள்ள நவீன மனிதர்கள் அறிவின்பால் ஈர்க்கப்பட்டு, மற்ற மனிதர்களின் மனதைப் புரிந்து கொள்கிறேன் என்று, ஒவ்வொரு நபரும் அவரவர்க்கு தெரிந்த நபர்களின் மனதையே எளிதாக மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தி காயப்படுத்துகிறார்கள். ஏனென்றால், மனித மனம் அடிப்படையில் இருந்து பழகிய விதமே சுயமாக நம்புவது, மற்றொன்று சமூகம் கொடுக்கும் வாழ்க்கையை நம்புவதாகும்.

அதாவது, ஒரு விஷயத்தை தானாக உணர்ந்து, முழுதாக தன்னை நம்ப வேண்டும் அல்லது மற்றவர்கள் கூறும் வார்த்தைகளால், நம் மனதிற்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இந்த ரெண்டு வரிகளையும் மனித மனதிற்கு தருவதற்கு அறிவியல் மட்டுமே போதாது என்பதே உண்மை. தீவிர மனநோய்களுக்கு மனநல மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக தேவை என்பதை ஒரு மனநல ஆலோசகராக என்றுமே கூறுவேன். ஆனால் தினம் தினம் நமக்குள் இருக்கும் தீவிர சிந்தனையின் தாக்கத்திற்கு கலையும், இலக்கியமும் மட்டுமே வழிகாட்டியாக இருக்கும்.

ஏனென்றால், நாம் கலைகளால் மட்டுமே மீண்டு வந்தவர்கள் என்பதை வரலாறு முழுக்க தெரிவித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில், மக்கள் அனைவரும் ஒரு கொண்டாட்டத்தை எதிர்நோக்கிய காலக்கட்டத்தில், 1944- இல் இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி அவர்கள் இயக்கிய ஹரிதாஸ் என்ற காதலும், கேலியும் கலந்த திரைப்படம், மூன்று தீபாவளி கடந்து ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் என்று வரலாற்று சாட்சியாக இன்றும் இருக்கிறது என எழுத்தாளர் ஜா. தீபா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

வளரிளம் பருவ வயதிலிருந்து Abstract Thinking அதீத கற்பனைத் திறன் ஏற்படும். அந்த கற்பனைகளை முறைப்படுத்த கலை மற்றும் இலக்கியத்தால் மட்டுமே முடியும். அந்த கற்பனைகளை முறைப்படுத்தவே, நம் அரசும் பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கியம் சார்ந்த திருவிழா என்று, ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்துகிறார்கள்.

நம் மனதுக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளையும், வெளிப்படுத்தினால் மனிதர்களால் என்றுமே தாங்க முடியாது. நம் மனதுக்குள் இருக்கும் சிந்தனைகளையும், எண்ணங்களையும் கையாள வேண்டுமென்றால், அவை கலை வடிவத்தில் படைப்பாக இருக்கும் போது மட்டுமே மனிதன் நிதானமாக இருக்கிறான். அதனால்தான் இன்றும் தேவதாஸ், பார்வதி நாடகமாக இருக்கட்டும், ரோமியோ ஜூலியட் காதலின் கதையாக இருக்கட்டும், அனைத்தையும் பாடலாக, நடனமாக, இசையாக, நாவலாக, கவிதையாக, நாடகமாக, திரைப்படமாக என்று பல்வேறு விதங்களில் பதிவு செய்து கொண்டே வருகிறார்கள். அப்படி பதிவு செய்யும் போது, வாழ்க்கையின் பல விஷயங்களில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்க உதவும்.

இன்றைய நவீன உலகில் நம் மக்கள், கொஞ்சமல்ல, அதீதமாக காட்சி ஊடகங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய சொந்தக் கற்பனை என்பது குறைந்து கொண்டே வருகிறது என்பது அவர்களுக்கே தெரியாமல் போய் விடுகிறது. வாசிப்பும், எழுத்தும் தான் நம் கற்பனைகளை மெருகேற்றும். காட்சி ஊடகங்கள் நம் சிந்திக்கும் தன்மையைக் குறைத்து விடும். கொஞ்சம் சோம்பேறித் தனத்தினால் கலை வடிவில் அவர்களை இணைத்துக் கொள்ள தவறி விடுகிறார்கள். அதனால் அவர்களின் எண்ணங்களை, பழக்கப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

அதற்கேற்ப மனநல மருத்துவ வார்த்தைகளை பயன்படுத்தும் போது, சமூகத்தால், வீட்டிலுள்ளவர்களால் கணிக்க முடியாத நபராக இருக்கிறோமோ என்று பயப்பட ஆரம்பிக்கிறார்கள். அந்த பயமே அவர்களை தனித்துவ மிக்க நபர் என்று பெருமையாக, வெளியே அறிவியல் வார்த்தைகளால் தங்களை முற்றிலும் மறைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் தனித்துவம் சிறந்தது தான். ஆனால் அளவுக்கு மீறிய தனித்துவம் மக்களிடம் இயல்பாக இணைய விடாது. அது நல்லதுமல்ல.

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொல்வது தான், நாகரிகம் தான் வளர்ந்துள்ளது, மனித உணர்வுகள் என்றுமே மாறாதது. அதனால் மனநல மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தி, சிறு சிறு உணர்வுகளின் வலிகளை மறைப்பதற்காக உங்களை நீங்களே ஒதுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi ,Dinakaran ,
× RELATED மனவெளிப் பயணம்