கோவை: கோவையில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலியானார். சென்டர் மீடியனில் மோதி கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் ஜார் கிராம் நகரை சேர்ந்தவர் அக்சய் போரா (23). இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே மேம்பால தூண் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அக்சய் போரா மீது மோதியது.
தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் சென்டர் மீடியனில் ஏறிய நிலையில் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த சிறுவன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து லேசான காயத்துடன் அவரை மீட்டனர். கார் மோதியதில் அக்சய் போரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், காரை ஓட்டி வந்தது சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் நள்ளிரவில் பெற்றோருக்கு தெரியாமல் சொகுசு காரை எடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பரிதாப பலி: கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.