புதுடெல்லி: நீட் இளங்கலை தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் மே மாதம் 5ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு 14 வெளிநாட்டு மையம் உட்பட 4750 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 23லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இந்நிலையில் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது என சர்ச்சைகள் எழுந்தது.
நீட் வினாத்தாள் முறைகேடுகள் தொடர்பாக விசாரனை நடத்தி வரும் சிபிஐ 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 12 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பாட்னாவில் இருந்து பங்கஜ்குமார் என்பவர் 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியதாக ராஜூ சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நீட் இளங்கலை தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். புதனன்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் புகைப்படம் மற்றும் செல்போன் எண்களை சிபிஐ அதிகாரிகள் எய்ம்ஸ் இயக்குனருக்கு அனுப்பி வைத்து இருந்தனர். இதனை தொடர்ந்து விடுதிக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், எய்ம்ஸ் டீன், விடுதி வார்டன் மற்றும் மூத்த பேராசிரியர்கள் முன்னிலையில் 4 மாணவர்களையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கி இருந்த விடுதி அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாணவர்கள் நான்கு பேரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை தொடர்ந்து நேற்று 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அறிவித்துள்ளது. சந்தன் சிங், ராகுல் அனந்த் மற்றும் குமார் ஷானு ஆகிய மூன்று பேரும் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். கரண் ஜெயின் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
நீட் தேர்வு இளங்கலை வினாத்தாள் முறைகேடு தொடர்பான வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post நீட் வினாத்தாள் கசிவு வழக்கு பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேர் கைது: விடுதி அறைக்கு சீல் appeared first on Dinakaran.