பூரி: ஒடிசா பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூலத்தின் உள் அறையானது இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அங்கிருந்த மதிப்புமிக்க ஆபரணங்கள் தற்காலிக கருவூலத்துக்கு மாற்றப்பட்டது. ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் உள்அறையை திறந்து அங்குள்ள விலை உயர்ந்த பொருள்களை மதிப்பிட, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒடிசாஉயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வந்த் ராத் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
கோயிலின் ரத்ன பந்தர் எனப்படும் கருவூலத்தின் வெளி மற்றும் உள்அறையானது 46 ஆண்டுகளுக்கு பின் கடந்த14ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் தற்காலிக கருவூல அறைக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கருவூலத்தின் உள்அறையை மீண்டும் திறந்து அங்கிருக்கும் பொருட்களை மாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று காலை 9.51மணிக்கு கருவூலத்தின் உள்அறை திறக்கப்பட்டது.
ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர், ஒடிசா அரசினால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த அனைத்து விலை உயர்ந்த பொருட்களும் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருவூலத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது.
அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கருவூவலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் தெரிவித்தார். ஒரே நாளில் ஆபரணங்களை மாற்றும் பணி முடிவடையாதபட்சத்தில் நிலையான பணி தொடரும். அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார். கருவூல உள்துறை திறக்கப்படுவதால் நேற்று காலை 8 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
The post பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூல உள்அறை 2வது முறையாக திறப்பு: தங்க ஆபரணங்கள் வேறு அறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.