- எம் விஜயபாஸ்கர்
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- சேகர்
- தம்பி
- தின மலர்
சென்னை: நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனு செல்லாததாகி விட்டதாக கூறி தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சகோதரர் எம்.ஆர். சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகரின் மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், தாங்கள் சொல்லும் நபருக்கு நிலத்தை விற்க வேண்டுமென எம்.ஆர்.சேகர் மிரட்டியதாகவும், 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்திற்கு 95 லட்சம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை எம்.ஆர்.சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று எம்.ஆர்.சேகருக்கு உத்தரவிட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரது முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: தம்பியை கைது செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை appeared first on Dinakaran.