சென்னை: கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி கோவையை சேர்ந்த சுபாஷ் என்பவர் பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து குர்லா விரைவு ரயிலில் 8வது பெட்டியில் பயணம் செய்தபோது, அவரது பையில் வைத்திருந்த 5954 கிராம் தங்கக்கட்டி மற்றும் 10.10 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து இந்த வழக்கில் தனிப்படை போலீசார் நடத்திய வேட்டையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்வான் பானிசவான் (22), விஜய்குண்டில்க்ஜங்கலே (20), அமர்பாரத்திம்கிரே (20), அணிகித் சுபாஷ்மானே (23) சைதன்யா விஜய்ஷிண்டே (20), கௌரவ் மாருதிவாக்மரே (19) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டன.
அதைப்போன்று கடந்த 8ம் தேதி கேரள மாநிலம் மலப்புரம், நட்டம் வெட்டி பகுதியை சேர்ந்த முகமது சலீம் (35) என்பவர் திரூர் ரயில் நிலையத்திலிருந்து மங்களூர் சென்னை விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் திருப்பூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது 20 வயது மதிக்கதக்க 2 பேர் அவரிடம் இருந்து ஐபோனை பறித்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த அப்பு (எ) முருகானந்தம் (28), ராமலிங்கம் (எ) ராமு, (28) ஆகியோரை கடந்த 13ம் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டன.
மேலும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மெஹதா காத்தூன் என்பவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக பெங்களூரிலிருந்து தானாபூர் வரை செல்லும் சங்கமித்ரா விரைவு ரயிலில் பெங்களூரிலிருந்து பயணம் செய்துள்ளார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரயில் பொம்பூர் ரயில் நிலையம் வருவதற்கு முன்னர் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது சம்மந்தமான தகவல் பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் வேளாங்கன்னி என்பவர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விரைந்து ரயில் நிலையம் சென்று ரயில் நிலையம் வந்தவுடன் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது பணியில் துரிதமாக செயல்பட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் வேளாங்கன்னியின் பணியை ரயில்வே காவல் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மேலும் ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24×7 ரயில்வே காவல் உதவி மைய எண் 1912 மற்றும் வாட்ஸ்அப் எண் 99625-00600 ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ஓடும் ரயிலில் பயணியிடம் இருந்து 744 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் கொள்ளை அடித்த மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேர் பிடிபட்டனர்: தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.