×

நீரிழிவால் பாத புண் ஏற்பட்ட நோயாளிக்கு டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி மூலம் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை தகவல்

சென்னை: நீரிழிவு நோயால் பாத புண் ஏற்பட்ட நோயாளிக்கு டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி மூலம் சிகிச்சை அளிப்பதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நீரிழிவு நோயாளி ஒருவர் கடுமையான பாத புண்களினால் அவதிப்பட்ட வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து மருத்துவமனைகளிலும் காலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைகாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நவீன சாதனங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர்.

அதன்படி, முதலில் அறுவைசிகிச்சை மூலம் புண்ணிலுள்ள சேதமடைந்த திசுக்கள் மற்றும் இறந்த திசுக்களை துல்லியமாக அகற்றி பாதிப்படைந்திருந்த இடம் குணமாவதற்காக முதலில் தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி (Topical Oxygen Therapy – TOT) என்ற மிக நவீன சிகிச்சை அந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. அதாவது, டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி மூலம் செறிவாக்கப்பட்ட ஆக்சிஜனை நேரடியாக புண் மீது செலுத்தப்படுகிறது, அவ்வாறு செய்யும் போது ஆக்சிஜன் நிலை அதிகரிக்கும், பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைக்கும் மற்றும் புதிய ரத்த நாளங்கள் உருவாவதை தூண்டும்.

இதன் மூலம் குணமடையும் செயல்முறை கணிசமாக மேம்படுத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பிறகு, பாதத்திலிருந்த புண்ணின் நிலைமை பிளவு – தோல் ஒட்டுதல் செயல்முறையை மேற்கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து, பாதத்திலிருந்த காயம் முழுமையாக மூடப்படும் நிலை எட்டப்பட்டது. இந்த தொடர் சிகிச்சைகள் காலை வெட்டி அகற்றுவதிலிருந்து காப்பாற்றியதோடு, அவரது வாழ்க்கைத் தரத்தையும் கணிசமான அளவு உயர்த்தியிருக்கிறது.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை டாக்டர் சிவக்குமார் கூறியதாவது: பாத புண்ணுக்கு வழக்கமான அறுவை சிகிச்சை செயல்பாடுகளோடு டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபியை ஒருங்கிணைப்பதன் வாயிலாக புண்ணின் காயத்திற்கு சிகிச்சையளிப்பதோடு, இத்தகைய நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும் முந்தைய இயல்புநிலைக்கு கொண்டு வர முடிகிறது. இந்த செயல்முறையின் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனை 10 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக நீரிழிவு பாத புண்கள் (DFUs) மற்றும் வழக்கமான சிகிச்சை வழிமுறையும், குறைவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்துகின்ற குருதித்தடை காயங்கள் போன்ற நாட்பட்ட தீவிர புண்கள் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை திறம்பட பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நீரிழிவால் பாத புண் ஏற்பட்ட நோயாளிக்கு டாப்பிக்கல் ஆக்சிஜன் தெரபி மூலம் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.

Tags : Apollo Hospital ,CHENNAI ,West Bengal ,Dinakaran ,
× RELATED ஆயுர்வேத உணவு பொருட்கள் விற்பனைக்காக...