×

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை, செப்.7: மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், ₹47 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டி கடைகள் வழங்கும் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி 900 தள்ளுவண்டி கடைகளில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் அருண்பாபு, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டி கடைகள் ஒதுக்க முடியும் என்பது குறித்து 2 வாரங்களில் தெரிவிக்குமாறு மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து, மெரினா லூப் சாலையில் மீனவர்கள் மீன் வியாபாரம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் சந்தை ஆகஸ்ட் 12ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளை ஒதுக்கீடு செய்து முழுமையாக பட்டியலை சமர்ப்பிக்க 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதேபோல், தி.நகரில் சாலையோர கடைகளை கண்டறிவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் நடைபாதை கடைகள் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கலந்துபேசி தெரிவிக்கிறேன் என கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Dinakaran ,
× RELATED ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’...