×

டைடல் பார்க் 2வது யூ-டர்ன் பாலம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: நெடுஞ்சாலைத்துறை தகவல்

சென்னை: ராஜிவ் காந்தி சாலை மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். இதனால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ரூ.108 கோடியில் யூடர்ன் மேம்பாலம் அமைக்கப்படும் என 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே யூடர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்தாண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் கட்டப்பட்டு வரும் 2வது யூடர்ன் மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி கூறியதாவது: டைடல் பார்க் சந்திப்பில், ராஜிவ் காந்தி சாலையில் கட்டப்பட்டுள்ள யூடர்ன் மேம்பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. சர்வீஸ் ரோடு மற்றும் ஒருபுறம் சாய்வுதளம் அமைக்கப்பட உள்ளது. சிஎஸ்ஐஆர் சாலையில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யூ-டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யூ-டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்குச் செல்லும் சாலையில் இறங்கி செல்ல முடியும். சாய்தளம் அமைய உள்ள பகுதியில் உள்ள மின்சார வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டு சாய்வு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post டைடல் பார்க் 2வது யூ-டர்ன் பாலம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: நெடுஞ்சாலைத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tidal Park 2nd U-turn bridge ,Highways Department ,CHENNAI ,Tidal Park ,Rajiv Gandhi Road ,ECR Road ,Highway Department ,Dinakaran ,
× RELATED கருவேல முட்செடிகள் அகற்றும் பணி...