×

தேர்வு மையம் வாரியாக அனைத்து மாணவர்களின் நீட் மதிப்பெண் விவரம் வெளியிட வேண்டும்: என்.டி.ஏ இணையதளத்தில் நாளை மதியம் 12 மணிக்குள் பதிவேற்ற கெடு, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நடந்து முடிந்த நீட் தேர்வில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் நாளை மதியம் 12 மணிக்குள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதில் 23.33 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாகவும் பல இடங்களில் ஆள்மாறாட்ட முறைகேடுகள் நடந்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையான நிலையில் சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ வழக்கு பதிவு செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலரை கைது செய்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மறு தேர்வு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 11ம் தேதி நடந்த நிலையில், நீட் வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்த வழக்கிற்கு முன்னுரிமை அளிப்பதாக தலைமை நீதிபதி கூறி விசாரணையை தொடங்கினார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, ‘‘நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை பல்வேறு விஷயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்துள்ளது.

தனியார் கொரியர் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட வினாத்தாள் 6 நாட்களுக்குப் பிறகு தான் சம்மந்தப்பட்ட நகரங்களுக்கு சென்றடைந்துள்ளது. ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக்கில் ஆட்டோவில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதுவும் எந்த ஒரு பாதுகாவலரும் இல்லாமல் வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அலட்சியங்களால்தான் வினாத்தாள் கசிந்துள்ளது. 550 முதல் 720 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை இம்முறை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 1.08 லட்சம் மாணவர்கள் இன்று நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்’’ என்றார்.

இதை மறுத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ஆட்டோவில் அனுப்பப்பட்டவை வினாத்தாள் அல்ல. அவை ஓஎம்ஆர் தாள்கள் மட்டுமே. வினாத்தாள் அச்சடிப்பது முதல் மையங்களுக்கு அனுப்புவது வரை 7 விதமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை குறித்து சிபிஐயும் ஆய்வு செய்து வருகிறது. இம்முறை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்தம் 1.08 மருத்துவ சீட்கள் உள்ளன.

இதில் இல்லாத 131 மாணவர்கள் மறுதேர்வு கோரி நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். 1.08 லட்சம் மாணவர்களில் உள்ள 254 பேர் மறுதேர்வு கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் சிலர் அரசு கல்லூரிகளில் சீட் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது.

அதுவும் எப்போது வினாத்தாள் கசிந்தது என்பதுதான் முக்கியமான கேள்வி? தேர்வு நடப்பதற்கு 45 நிமிடங்கள் முன்பாக வினாத்தாள் கசிந்திருந்தால் அதற்குள் 180 கேள்விக்கும் சரியான விடையை நிபுணர்களால் கண்டறிந்து மாணவர்களுக்கு கூற முடிந்திருக்குமா? ஹசாரிபாக்கில் 80 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது. அதே போல, குஜராத்தின் கோத்ராவில் தேர்வு மைய அதிகாரி குறிப்பிட்ட மாணவர்களின் ஓஎம்ஆர் தாள்களில் விடைகளை நிரப்ப பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே வினாத்தாள் கசிவு திட்டமிட்ட முறையில் பெரும்பாலான பகுதிகளில் நடந்துள்ளது என்றும், அது முழு தேர்வையும் பாதித்தது என்றும் கூறும் மனுதாரர்கள், அதனை நிரூபிக்க வேண்டும். வினாத்தாள் கசிவால் நீட் தேர்வின் புனிதத்தன்மை முற்றிலும் பாதித்தது என்றால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும். இதுதொடர்பாக வரும் 22ம் தேதி மனுதாரர்கள் வாதங்களை முன்வைக்கலாம். நீட் முடிவுகள் வெளியீட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதற்காக மாணவர்களின் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதை நீதிமன்றம் ஏற்கிறது. எனவே நீட் தேர்வில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் நகரம் வாரியாகவும், தேர்வு மையம் வாரியாகவும் நாளை (20ம் தேதி) பிற்பகல் 12 மணிக்குள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் மாணவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டிருப்பது அவசியமாகும். இதன் தேர்வு நடைமுறையில் கண்ணியத்தையும், வெளிப்படைத்தன்மையும் உறுதிபடுத்தப்படும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

* நீட் கவுன்சிலிங் எப்போது?
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், ஜூலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீட் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக, கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகமும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. தற்போது வரும் திங்கட்கிழமை நீட் வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீட் கவுன்சிலிங் வரும் 24ம் தேதி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தேர்வு மையம் வாரியாக அனைத்து மாணவர்களின் நீட் மதிப்பெண் விவரம் வெளியிட வேண்டும்: என்.டி.ஏ இணையதளத்தில் நாளை மதியம் 12 மணிக்குள் பதிவேற்ற கெடு, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NDA ,New Delhi ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...