கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஒரு மாதம் தலைமறைவாக இருந்த அதிமுக மாஜி அமைச்சர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் நேற்று அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் நேற்று மாலை அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் போலீசில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் செய்திருந்தார். இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார். சார்பதிவாளர் கொடுத்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உட்பட 13 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தானும் கைது செய்யப்படலாம் என கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திடீரென தலைமறைவானார். கடந்த 1 மாதமாக தலைமறைவாக இருந்தபடி வழக்கறிஞர்கள் மூலம் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கேரளாவுக்கு தப்பியோடினார். இதனையடுத்து விஜயபாஸ்கரை பிடிக்க 10 தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பதாகவும், அவர் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வருவதாகவும் சிபிசிஐடி ஐஜி அன்புக்கு வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன்(28) ஆகியோரை சிபிசிஐடி தனிப்படையினர் திருச்சூரில் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, காரில் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு விஜயபாஸ்கரிடம் 6 மணி நேர விசாரணைக்கு பின் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இரவு 9.30 மணிக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.15 மணி அளவில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரையும் 15 நாள் (31ம்தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அதிகாலை 4.15 மணியளவில் கரூரிலிருந்து பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உறவினர் பிரவீன் குளித்தலை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இந்த மோசடி வழக்கில், பிரகாஷின் மகள் ஷோபனாவின் பெயரில் இருந்த பத்திரம் காணாமல் போய்விட்டதாக வில்லிவாக்கம் போலீசில் அளித்த புகாரில், பத்திரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் போலி சான்றிதழ் அளித்துள்ளார். இந்த சான்றிதழை பயன்படுத்தி தான், பத்திரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே போலி சான்றிதழ் அளித்ததற்கு இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் உடந்தையாக இருந்ததாக பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் நேற்றுமுன்தினம் இரவு சிபிசிஐடி போலீசார், வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை கைது செய்தனர்.
பின்னர் அவரை நேற்று காலை 6 மணியளவில் கரூர் அழைத்து வந்தனர். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் பிருத்விராஜிடம், மதியம் 2 மணி வரை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. இதனைதொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக நேற்று மதியம் 2.30 மணியளவில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிருத்விராஜை அழைத்து சென்றனர். பின்னர், கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி பரத்குமார் முன்பு மதியம் 3.30 மணியளவில் பிருத்விராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் (31ம்தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். கரூரிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சேலத்துக்கு அழைத்து வரப்பட்ட இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ரூ.100 கோடி நில அபகரிப்பில் அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உடந்தை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: மேலும் சிலருக்கு தொடர்பா? என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.