×
Saravana Stores

நில மோசடி புகாரில் நடிகை கவுதமியின் மாஜி மேலாளர் கைது

சென்னை: சினிமாவில் பிசியாக நடித்து வந்த காலத்தில் நடிகை கவுதமி பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி வைத்திருந்தார். மேலும், சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் பாஜவில் இணைந்து பணியாற்றி, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவரிடம் மேலாளராக பணியாற்றிய அழகப்பன், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில், நடிகை கவுதமி மற்றும் அவரின் அண்ணன் ஸ்ரீகாந்த்துக்கு சொந்தமான சொத்தான சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான 46 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்றதாக கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆண்டு நவ.2ம்தேதி நடிகை கவுதமி கொடுத்த புகாரின்பேரில, அவரின் மேலாளர் அழகப்பன், அழகப்பன் மனைவி நாச்சியாள் உள்ளிட்ட 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நவ.9ம்தேதி நடிகை கவுதமி காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி மோசடி செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்கள், இடத்தின் மதிப்பு, எப்போது வாங்கப்பட்டது உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்து விளக்கம் அளித்தார்.

அதனடிப்படையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த அழகப்பன் (64) உள்ளிட்ட 6 பேரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து அழகப்பனை கைது செய்த போலீசார், அவரை காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கைதான அழகப்பனை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததை தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் பரிசோதனைக்கு பிறகு அழகப்பனை போலீசார் இன்று காலை சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post நில மோசடி புகாரில் நடிகை கவுதமியின் மாஜி மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Gauthami ,Chennai ,BJP ,Alagappan ,
× RELATED ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கு பாஜ...