×

செயின், தோடு, வளையல், தாலி கழற்ற சொல்லி ஆராய்ந்த பிறகும் நீட் தேர்வறைக்குள் ஆள்மாறாட்டம் எப்படி? தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: ‘எந்த ஆதாரத்தை வைத்து ஆள் மாறாட்டம் செய்யும் அளவிற்கு போலியாக ேதர்வு எழுதுபவர்களை தேர்வறைக்கு அனுமதித்தீர்கள்’ என்று நீட் தேர்வு வழக்கில் தேசிய தேர்வு முகமையிடம், ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். கடந்த 5.5.2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர், ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது பெற்றோர், இடைத்தரகர்கள் என பலரையும் கைது செய்தனர்.

மேலும், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தை தேர்வாணையம் எவ்வாறு அனுமதித்தது? நீட் தேர்வு நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், வழக்கு விசாரணையில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. 3 மாதத்தில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டிய போலீசார், இன்னும் ஏன் தாமதப்படுத்தி வருகின்றனர். சிபிசிஐடி தரப்பில் இதுவரை என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சிபிசிஐடி தரப்பில், ஓஎம்ஆர் நகல், வருகை பதிவேடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘சம்பவம் நடந்து 5 ஆண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், விசாரணை தொய்வாக உள்ளதே? சிபிசிஐடி போலீசார் சிபிஐ அமைப்புக்கு நிகரானவர்கள். இன்னும் வழக்கு சம்பந்தமாக பல ஆவணங்களை பெற வேண்டியுள்ள நிலையில் எப்படி மேல் நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றார். சிபிசிஐடி தரப்பில், ‘‘வழக்கு எங்களிடம் வந்தவுடன் முறையாக விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளோம்.

அதன்பிறகு கொரோனா ஊரடங்கு அமலானதால், விசாரணையை முழுமையாக நடத்த முடியவில்லை. அதன்பிறகு மீண்டும் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு நடைபெற்ற மையங்களில் எடுத்த வீடியோ காட்சிகள், சிசிடிவி காட்சி பதிவுகள் ஆகியவற்றை கேட்டோம். அவர்கள் வீடியோ காட்சிகள் அழிந்து விட்டதாக கூறிவிட்டனர். அதனால் வழக்கு விசாரணையில் சற்று தாமதமாகி விட்டது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, தேசிய தேர்வு முகமையிடம், ‘‘நீட் தேர்வு நடைபெறும் பகுதியில் மாணவ, மாணவிகள் நுழையும்போது அவர்கள் அணிந்திருக்கும் செயின், தோடு, வளையல், தாலி உள்ளிட்ட அனைத்தையும் கழற்ற சொல்லி தேர்வு அறைக்கு அனுப்புகிறீர்கள்.

நீங்கள் எந்த ஆதாரத்தை வைத்து ஆள் மாறாட்டம் செய்யும் அளவிற்கு போலியாக தேர்வு எழுதுபவர்களை தேர்வு அறைக்கு அனுமதித்தீர்கள்? ஆதார் கார்டு தற்போது இந்தியாவில் அத்தியாவசியமான ஒரு அடையாள அட்டையாக கருதப்படும் சூழலில், ஆதார் கார்டை அடையாள சான்றாக பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதியளித்திருந்தால் ஆள் மாறாட்ட புகார் வந்திருக்காது. எந்த வகையில் நீங்கள் ஒரே பெயரில் பல இடங்களில் பலரை நீட் தேர்வு எழுத அனுமதித்தீர்கள்? நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரிடம் அடையாளத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தை சரி பார்த்தீர்களா’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு தேசிய தேர்வு முகமை, விண்ணப்ப விவரங்கள் ஆன்லைனில் தான் உள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சிபிசிஐடி போலீசார் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை எண்ணி விரைவில் வழக்கை துரிதப்படுத்தி விசாரணையை முடிக்க வேண்டும். சிபிசிஐடி போலீசார் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் தேசிய தேர்வு முகமை வழங்கவேண்டும். அதில் எந்தவித தாமதமும் கூடாது. சிபிசிஐடி போலீசார் அனைத்து ஆவணங்களையும் தேசிய தேர்வு முகமையிடம் பெற்ற 7 நாட்களுக்குள் தீவிரமாக விசாரணை நடத்தி நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சிபிசிஐடி தரப்பில் அறிக்கையாக இங்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ எனக் கூறி விசாரணையை ஜூலை 23க்கு தள்ளி வைத்தார். தற்போது இந்தியாவில் அத்தியாவசியமான ஒரு அடையாள அட்டையாக கருதப்படும் சூழலில், ஆதார் கார்டை அடையாள சான்றாக பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதியளித்திருந்தால் ஆள் மாறாட்ட புகார் வந்திருக்காது. எந்த வகையில் நீங்கள் ஒரே பெயரில் பல இடங்களில் பலரை நீட் தேர்வு எழுத அனுமதித்தீர்கள்?

* ஊடகங்கள் சரியாக செயல்படுகின்றன: நீதிபதி பாராட்டு
நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வு முறைகேடு குறித்து கன்னா பின்னானு செய்தி போடுவதாக ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர், நீதிபதியிடம் முறையிட்டார். அப்போது நீதிபதி புகழேந்தி, ‘‘ஊடகங்கள் சரியாகவே செயல்படுகின்றன. மாணவிகளின் நகைகளை கழற்றி ஆராயும் நீங்கள், போலியாக தேர்வு எழுதியவர்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை’’ என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

The post செயின், தோடு, வளையல், தாலி கழற்ற சொல்லி ஆராய்ந்த பிறகும் நீட் தேர்வறைக்குள் ஆள்மாறாட்டம் எப்படி? தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : National Examinations Agency ,Madurai ,National Examination Agency ,Judge ,Saramari ,Branch ,Dinakaran ,
× RELATED முதுகலை நீட் கேள்வித்தாள் வெளியானதா? தேசிய தேர்வு முகமை மறுப்பு