×

இரவுநேர ரோந்து பணியில் துப்பாக்கியுடன் வலம் வரும் போலீஸ்

புவனகிரி, ஜூலை 16: சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி உத்தரவு எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் போலீசார் இரவுநேர ரோந்து பணியில் துப்பாக்கியுடன் வலம் வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கண்டிப்பாக கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த நடைமுறையை கடலூர் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் கடைபிடித்து வருகின்றனர். இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்
துப்பாக்கியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வாகன சோதனை போன்ற நேரங்களில் துப்பாக்கி தெரியும் அளவுக்கு புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டும் என கடலூர் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் சிதம்பரம் உட்கோட்ட காவல் சரகத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன் வலம் வருகின்றனர். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என்ற நிலையில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் தலைமை காவலர் மற்றும் காவலர்கள் கண்டிப்பாக கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன்தான் ரோந்து செல்கிறார்களா? என்பதை உளவுத்துறை போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி உளவுத்துறை போலீசாரும் தினமும் இதை கண்காணித்து மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

The post இரவுநேர ரோந்து பணியில் துப்பாக்கியுடன் வலம் வரும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Cuddalore district ,DGP ,Bahujan Samaj Party ,president ,Armstrong ,Chennai ,Dinakaran ,
× RELATED கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர்...