×

யூரோ கோப்பை கால்பந்து: ஸ்பெயின் 4வது முறையாக சாம்பியன்; இங்கிலாந்து ஏமாற்றம்

பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் 17வது தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், பெர்லினில் நேற்று நடந்த பைனலில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் (3வது ரேங்க்) 5வது முறையாகவும், இங்கிலாந்து (5வது ரேங்க்) தொடர்ந்து 2வது முறையாகவும் களமிறங்கின.

இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் வலுவாக செயல்பட்டதால், இடைவேளையின்போது 0-0 என சமநிலை வகித்தன. 2வது பாதியில் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொண்ட ஸ்பெயின் அணிக்கு, 47வது நிமிடத்தில் நிகோ வில்லியம்ஸ் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து தரப்பிலும் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதன் பலனாக, 73வது நிமிடத்தில் பாமர் பந்தை வலைக்குள் திணிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. ஸ்பெயின் வீரர்களின் துல்லிய தாக்குதல்களை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் துடிப்புடன் செயல்பட்டு தடுத்தார்.

இழுபறி நீடித்த நிலையில்… 86வது நிமிடத்தில் மைகேல் ஒயர்ஸபால் அற்புதமாக கோல் அடிக்க, ஸ்பெயின் 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், பரபரப்பான ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி வெற்றியை வசப்படுத்தி 2012ம் ஆண்டுக்கு பிறகு 4வது முறையாக யூரோ கோப்பையை முத்தமிட்டது. தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாததால் இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் கண்ணீர் வடித்தனர். யூரோ கோப்பையில் இங்கிலாந்து அணியை வென்றதில்லை என்ற வரலாற்றையும் ஸ்பெயின் அணி மாற்றி எழுதியுள்ளது.

* தொடரின் வளரும் இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் வீரர் லாமின் யாமல் (16 வயது) பெற்றார்.
* பைனலின் ஆட்ட நாயகன் விருதை நிகோ வில்லியம்ஸ் (ஸ்பெயின்) தட்டிச் சென்றார். தொடர் நாயகனாக ரோட்ரி (ஸ்பெயின்) தேர்வு செய்யப்பட்டார்.
* அதிக கோல் அடித்தவர்களுக்கான ‘கோல்டன் பூட்’ விருதை ஜார்ஜியாவின் மிக்காவ்டட்ஸே, முசியலா (ஜெர்மனி), காக்போ (நெதர்லாந்து), ஒல்மா (ஸ்பெயின்), இவான் ஷ்ரன்ஸ் (சுலோவாகியா), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோர் பகிர்ந்து கொண்டனர் (தலா 3 கோல்).
* அதிக கோல் அடித்த அணியாக ஸ்பெயின் (15 கோல்) முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தது. முந்தைய சாதனை: பிரான்ஸ் 14 கோல் (1984).
* யூரோ கோப்பையை அதிக முறை வென்ற அணியாக ஸ்பெயின் (4) முத்திரை பதித்துள்ளது. ஜெர்மனி (3) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
* சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு முதல் பரிசாக ரூ.256.84 கோடியும், 2வது இடம் பிடித்த இங்கிலாந்துக்கு ரூ.220.48 கோடியும் வழங்கப்பட்டது.

The post யூரோ கோப்பை கால்பந்து: ஸ்பெயின் 4வது முறையாக சாம்பியன்; இங்கிலாந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : EURO CUP ,SPAIN ,ENGLAND ,Berlin ,Euro Cup football ,Germany ,Dinakaran ,
× RELATED ஸ்பெயினில் களைகட்டிய ”தக்காளி...