புதுடெல்லி: தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று பாஜவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரசார பேரணியின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது வாலிபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் டிரம்பின் காது காயமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்துடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை ஒப்பிட்டு பாஜ விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பதிவில், மூன்றாவது முறையாக தேர்தலில் தோல்வியடைந்த ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை அடிக்கடி ஊக்குவித்து நியாயப்படுத்துகிறார். என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், தலைவரின் பாதுகாப்பு விஷயத்தில் மலிவான அரசியல் செய்யக்கூடாது. காங்கிரஸ் கட்சியானது வலதுசாரி தீவிரவாதிகளிடம் மகாத்மா காந்தியை இழந்தது. நாங்கள் தீவிரவாதிகளின் கையில் இரண்டு பிரதமர்களை இழந்தோம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் எதிராக பொய்களை பரப்புவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மக்களை பாஜ தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தலைவர்களின் பாதுகாப்பில் மலிவான அரசியல் செய்யக்கூடாது: பாஜ மீது காங். கடும் சாடல் appeared first on Dinakaran.