சென்னை: அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி என்ற எண்ணம் மக்களிடையே தற்போதும் நிலவுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக உடன் பாஜக தலைவர்கள் உடனான நெருக்கம் அதிகரித்தது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 5 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளித்தது. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணி தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை என்றே பேசப்பட்டது. அப்போது பாஜக தலைவராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தலைமையின் கீழ் அதிருப்தியடைந்த சிலரை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டு மோதலை உருவாக்கியது.
எனினும் கூட்டணி தொடர்ந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அண்ணாவை பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதுதான் அதிமுக பாஜக கூட்டணி இடையேயான முறிவுக்கு காரணமாக பேசப்பட்டது. எதுவுமே சொல்லாமல் அமைதி காத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், இதெல்லாம் நாடகம் என்று அரசியல் கட்சியினர் தற்போது வரை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி என்ற எண்ணம் மக்களிடையே தற்போதும் நிலவுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி; பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை. பாஜகவுடன் வரும் நாட்களிலும் கூட்டணி கிடையாது என நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும்; அவர்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
The post அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி என்ற எண்ணம் மக்களிடையே தற்போதும் நிலவுகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.