×

பழனி, முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பழனி, முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வருகைதரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள், மாநாட்டு இலட்சினை வெளியிடுதல், வரப்பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்யும் பணிகள், மாநாட்டு முதன்மை அரங்கம் மற்றும் இதர அரங்கங்களின் வடிவமைப்பு, அரங்குகளுக்கு சூட்டப்படும் முருகனடியார்களின் பெயர்கள், மாநாட்டு மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர்களின் வடிவமைப்பு, கண்காட்சி அரங்கில் இடம் பெறும் அம்சங்களான அறுபடை வீடுகள், புகைப்படக் கண்காட்சி, காட்சியரங்கம், மாநாட்டில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பக்தி இசை நிகழ்ச்சி போன்ற பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்,லங்கா, மொரீசியஸ், ஹாங்காங், லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. இந்த ஆய்வுக் கட்டுரைகளை இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு பரிசீலித்து, தகுதிவாய்ந்த கட்டுரைகளை தேர்வு செய்து ஆய்வு மலர்களில் இடம்பெறச் செய்திடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாநாட்டின் அனைத்து அரங்குகளும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளோடும், கண்காட்சி அரங்கானது முருக பக்தர்கள் வியந்து போற்றும் வகையிலும் சிறப்பாக வடிவமைத்திட வேண்டும் அதற்கான பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் செயலர் சந்தரமோகன், ஆணையர் வீ.முரளீதரன், மாநாட்டின் ஓருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் தவத்திரு திருக்கயிலாய பரம்பரை, பேரூர் ஆதினம் முனைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், தவத்திரு மயிலம் பொம்மபுர ஆதீனம்  சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார், சுகிசிவம், தேசமங்கையர்க்கரசி, கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பழனி, முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : PALANI, MUTHAMIL MURUGAN CONFERENCE ,MINISTER ,SEKARBABU ,Chennai ,Palani, Muttamizh Murugan ,International Muttamil Murugan Conference ,Work ,Palani ,Office Meeting Hall ,Ministry of Finance ,Muttamizh Murugan Conference ,Sekarbhabu ,Dinakaran ,
× RELATED பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு...