×

விக்கிரவாண்டி இடைத்தேர்லில் திமுக அமோக வெற்றி சாதிய, மதவெறி சக்திகளுக்கு மக்கள் நெற்றியடி தீர்ப்பு: தலைவர்கள் கருத்து

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் சாதிய, மதவெறி சக்திகளுக்கு மக்கள் நெற்றியடி தீர்ப்பு வழங்கியுள்ளதாக தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: விக்கிரவாண்டியில் சமூகநீதி கொள்கையை அடகு வைத்து பாஜவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக படுதோல்வி அடைந்திருக்கிறது. மக்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை மீது நம்பிக்கை வைத்து அமோக வெற்றியை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கிற வகையில் விக்கிரவாண்டி தேர்தல் தீர்ப்பு அமைந்துள்ளது. அதேபோன்று, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை ஈட்டி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சரித்திரம் படைத்தது. திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட வன்மம் கலந்த அவதூறுகள் பொடிப் பொடியாக்கப்பட்டு, தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வழி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர் வெற்றிகள் பறை சாற்றுகிறது.

* விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றுதான். பிரசாரத்துக்கு சென்றிருந்த போது மக்களின் ஆர்வத்தை காண முடிந்தது. அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி போனது ஒரு தவறான முடிவு. அதிமுகவை சார்ந்தவர்களும் இன்றைக்கு திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் இவ்வளவு பெரிய வித்தியாசம்.

அதிமுக வாக்குகள் பாமகவுக்கு செல்லும் என விவாதம் செய்தார்கள். அது உண்மையல்ல. அதிமுகவுக்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள், இந்த முறை உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்துள்ளனர் என்பதுதான் இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்த ஆட்சிக்கு ஒரு நற்சான்றாகத்தான் திமுக வெற்றியை பார்க்க வேண்டும். இந்திய அளவில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் இருப்பதை உணர முடிகிறது.

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: சாதிய, மதவெறி சக்திகளை முற்றாக நிராகரித்து, திமுக வேட்பாளரை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியால் நிலைகுலைந்த அதிமுக தேர்தல் களம் இறங்கவில்லை. பாமகவோ, அதிமுக வாக்குகளை பெறலாம் என்ற ஆசையுடன் அலைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் சாதிய, மதவெறி சக்திகளுக்கு அரசியல் தளத்தில் இடமில்லை என்பதை விக்கிரவாண்டி மக்கள் நெற்றியடி தீர்ப்பாக வழங்கியுள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது.

* மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இந்தியா முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்திலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற ஒரு மகத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடாளுமன்ற தேர்தலிலும் அதுதான் நடந்தது. இரண்டு கூட்டணி கட்சிகளை வைத்துக் கொண்டு பாஜ ஆட்சி அமைத்துள்ளது. எனவே, வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வரவில்லை. தோற்றுப்போன கட்சி தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

இதை உறுதிபடுத்தும் வகையில் இந்த இடைத்தேர்தலில், பாஜக சிட்டிங்காக இருக்கக் கூடிய இடங்களில் கூட அவர்களால் அந்த தொகுதிகளை தக்க வைக்க முடியவில்லை. பாஜக மீது மக்களுக்கு எவ்வளவு பெரிய வெறுப்பு வந்திருக்கிறது என்பதை காண முடிகிறது. எதிர்காலத்தில் பாஜக படுதோல்வியை தான் சந்திக்கும். 82.48 சதவீத மக்கள் வாக்களித்திருப்பதை பார்க்கும் போது, அதிமுக அணிகள் அவர்கள் தலைமையை மீறி திமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது நிருபணமாகியுள்ளது. இதுவே எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.

* தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்: கடந்த 3 ஆண்டு கால முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டம், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, தொழில் வளத்தை கணக்கிட்டு எடை போட்டு பார்த்து மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். வன்னியர்கள் பெருவாரியான தொகுதியான விக்கிரவாண்டியில், தமிழ்நாட்டுக்கு விரோதமான, மத நல்லிணக்கத்திற்கு விரோதமான, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு விரோதமான பாஜவோடு கூட்டணி அமைத்ததால் பாமக படுதோல்வி அடைந்தது. எந்த ரூபத்தில், எந்த முகமூடியை அணிந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடம் இல்லை என்பதை இத் தேர்தல் நிருபித்துள்ளது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்லில் திமுக அமோக வெற்றி சாதிய, மதவெறி சக்திகளுக்கு மக்கள் நெற்றியடி தீர்ப்பு: தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : DMK ,Vikravandi ,sectarian ,CHENNAI ,Vikravandi by-election ,casteist ,Tamil Nadu Congress ,Selvaperunthagai ,BJP ,Vikravandi by ,elections ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்