×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விடுவிப்பு: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கோவையில் பணியாற்றியபோது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரியான விஜயசேகர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 15,83,793 சேர்த்ததாக அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை 2023ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி விஜயசேகர் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த மனு தள்ளுபடி ஆனது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விவேக் குமார்சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. விஜயசேகர் சார்பில் வழக்கறிஞர் சரத் சந்திரன் ஆஜராகி, அரசு தரப்பு குற்றசாட்டில் மனுதாரர் 2006 ஜனவரி 1 முதல் 2010 டிசம்பர் 31வரையிலான காலகட்டத்தில் ரூ.15,83,793 கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பு கூறும் காலக்கட்டத்தில் மனுதாரர் கோவையில் பணியாற்றியிருக்கவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டதுஎன்று வாதிட்டார்.

அதற்கு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்தோஷ் வாதிடும்போது, மனுதாரர் ஒரு பொது ஊழியர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அவர் சொத்து குறித்து திருப்தி அளிக்க கூடிய கணக்குகளை காட்டவில்லைஎன்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(1)(டி)ன் கீழ் பொது ஊழியர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றச்சாட்டுகளை அரசு தரப்புதான் நிரூபிக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்று நிரூபிக்க தேவையில்லை. மனுதாரர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 2006 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் அவர் கோவையில் பணியாற்றவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்காமல் தவறுதலாக தீர்ப்பளித்துள்ளது. எனவே, விஜயசேகர் தன்னை விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த கோவை சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

 

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விடுவிப்பு: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Fire Department ,CHENNAI ,Coimbatore ,Fire and Rescue Department ,Vijayasekar ,Tamil Nadu Anti-Corruption Department ,Tamil ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...