×

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீதான தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மனுதாரர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார். இந்நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலை வரும் 16ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

The post அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Madras Principal Sessions Court ,Chennai ,Principal Sessions Court of Chennai ,Enforcement Directorate ,Chennai Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...