×
Saravana Stores

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குகள் நாளை (13ம் தேதி) எண்ணப்படுகிறது. காலை 8 மணி துவங்கும் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. 11 மணியளவில் முடிவு தெரிந்து விடும். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைதேர்தல் முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதால் தமிழகமே இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் ஆண்கள் 95536 பேர், பெண்கள் 99944 பேரும், இதர வாக்காளர்கள் 15 பேர் என மொத்தம் 195495 பேர் வாக்களித்தனர். இதன்படி 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மேலும் அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு சுற்றாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நாளை (13ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். காலை 11 மணியளவில் முடிவு தெரியவரும். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் 2-வது அடுக்கில் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3வது அடுக்கில் வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயில் பகுதியில் உள்ளூர் போலீசாரும் என 150 பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 பிரிவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும் appeared first on Dinakaran.

Tags : Wikivandi ,Wickrowandi ,Vidyapuram ,District ,Wickrawandi Assembly Constituency Dimuka ,MLA ,Vikraandi ,Dinakaran ,
× RELATED த.வெ.க மாநாடு நடந்த நாளில் விழுப்புரம்,...