×
Saravana Stores

த.வெ.க மாநாடு நடந்த நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை

விழுப்புரம்: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் குவிந்தனர். இவர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க தொண்டர்கள் முண்டியடித்தனர். இந்நிலையில், த.வெ.க மாநாட்டையொட்டி 26 மற்றும் 27ம் தேதிகளில் மட்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு கடைகளிலும் நாளொன்றுக்கு ரூ. 2 முதல் ரூ. 3 லட்சத்திற்கு மது விற்பனை என ஒரு நாளைக்கு மொத்தமாக அதிகபட்சம் ரூ. 3.75 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். மாநாடு நடைபெற்ற தினத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, சுமார் ரூ. 6 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக மாநாடு நடைபெறும் முதல் நாள் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வந்ததாலும் மதுபானங்கள் அதிகமாக விற்பனை நடந்து உள்ளது. அதாவது கடந்த 26ம் தேதி 4 ந்கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது. இரண்டு நாள் சேர்த்து ரூ. 10 கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வழியில் கள்ளக்குறிச்சியில் தொடங்கி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிவாண்டி டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக ஒவ்வொரு கடைகளிலும் ரூ. 8 முதல் ரூ. 10 லட்சத்திற்கு பீர், பிராந்தி விற்பனையாகியுள்ளது. மாநாடுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் வழக்கமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மது விற்பனை நடைபெறும். மாநாடு நடந்த அன்று ரூ. 8 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையைபோல் பல மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல் புதுச்சேரி எல்லையான திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மது விற்பனை அன்றையதினம் அதிகரித்தது.

The post த.வெ.க மாநாடு நடந்த நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Kallakurichi ,Tamil Nadu Victory Club ,Vidyapuram District Vikriwandi ,Tamil Nadu ,Tasmak ,
× RELATED எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமே அதை...