×

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு இன்று (12ம் தேதி) கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறநிலையத் துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமானால் கோயிலில் கொடிமரம், கலசம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். பாம்பன் சுவாமி கோயிலில் இதுவரை எந்த கும்பாபிஷேகமும் நடத்தப்படவில்லை, என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

அதற்கு அறநிலைய துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கும்பாபிஷேகம் நடத்தலாம். பாலாலயம் ஏற்கனவே முடிந்து விட்டது. முருகன், விநாயகர் சிலைகள் அங்கு உள்ளதால் இது கோயில்தான் என்று வாதிட்டார். இதையடுத்து பூஜைகள், விழாக்களை அறநிலையத் துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, கும்பாபிஷேகம் நடத்தும் விஷயத்தில் தலையிட முடியாது. அதேசமயம், பாம்பன் சுவாமிகள் கோயில், சமாதியா, கோயிலா என்று முடிவெடுக்க வேண்டியுள்ளதால் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறினர்.

The post திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiyur Pampan Swamy temple ,CHENNAI ,Department of Charities ,Madras High Court ,Saiva Siddhanta Forum ,Thiruvanmiyur Pampan Swami Temple ,Dinakaran ,
× RELATED முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!