புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மூன்று குற்றவியல் சட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு ஆணையம் அமைத்துள்ளது. அது எந்தெந்த திருத்தங்களை கொண்டு வரலாம் என்பதை பரிந்துரைக்கும். நிச்சயம் தமிழ்நாடு அரசு அதை கொண்டு வரும். எங்களை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் இந்த மூன்று சட்டங்கள் தேவையில்லாத ஒன்று என்று கருதுகிறார்கள்.
இதில் ஒன்றிய அரசு கவுரவம் பார்க்காமல் இந்த சட்டத்தை நீக்கி விட்டு பழைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. இன்று அவருடைய இயக்கத்திலேயே கொங்கு மண்டலத்தை சார்ந்தவர்களும் அழுத்தம் தருகிறார்கள். டெல்டா மாவட்டத்தை சார்ந்தவர்களும் அழுத்தம் தருகிறார்கள். இதெல்லாம் செய்திகளாகவே வந்து விட்டன. இதை மற்றவர்கள் மறுப்பதற்கான வாய்ப்பு இல்லை.
நான் ஏற்கனவே கூறியதை போல் தேர்தலுக்கு பிறகு அதிமுக ஒரு ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க போகிறது என்றேன். இது தற்போது நடந்து கொண்டிருக்கிறது அதுதான் உண்மை. அதனால் அங்கு இருக்கக்கூடிய உண்மையான தொண்டர்கள் திமுகவிற்கு நம்பி வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம். தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உண்டு. அவர் எந்த மாநிலத்திற்கு சென்று இருந்தாலும் நிச்சயம் நமது காவல்துறை கண்டுபிடித்து கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கொங்கும், டெல்டாவும் அழுத்தம் தருகிறது ஆபத்தான நிலையில் அதிமுக பரிதாப நிலைமையில் இபிஎஸ்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.