×

சீனாவிலிருந்து இந்திய கடல் எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட 2,560 கிலோ அபாய கெமிக்கல் பறிமுதல்: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிரடி

சென்னை: சீனாவிலிருந்து இந்திய கடல் எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடிய 2,560 கிலோ அபாய கெமிக்கல் பேரல்களை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வைத்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து ஒரு சரக்கு கப்பல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி புறப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்தது.

அந்த கப்பல், இந்திய கடல் எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும் வழியில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கடந்த மே 8ம் தேதி வந்து நின்றது. சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் அந்தக் கப்பலில் என்ன இருக்கிறது? என்று கண்காணித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் கப்பலில் ஆர்த்தோ குளோரோ வின்சிலிடன் மாலோனோ நைட்ரில் என்ற ஒருவகை அமிலம் இருப்பது தெரியவந்தது. இந்த அமிலம் மிகவும் அபாயகரமானது.

கண்ணீர் புகை குண்டுகள் தயாரிப்பதற்கு மூலப் பொருட்களாக இந்த அமிலத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்தது. அந்தவகை அபாயகரமான அமிலம் 103 பேரல்களில் மொத்தம் 2,560 கிலோ இருந்துள்ளது. இந்த சரக்கு கப்பல் இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாகச் செல்வதால், முறைப்படி சரக்கு கப்பலில் என்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்து இந்திய சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இந்த சரக்கு கப்பல் நிர்வாகம் அதுபோன்ற தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த கப்பலில் மிகவும் அபாயகரமான அமிலம் இருந்ததால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி 2,560 கிலோ அபாயகரமான அமிலத்தை பறிமுதல் செய்து விசாரணை நடக்கிறது.காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அபாயகரமான கெமிக்கல் பேரல்கள், சென்னை சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சீனாவிலிருந்து இந்திய கடல் எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட 2,560 கிலோ அபாய கெமிக்கல் பறிமுதல்: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : China ,Pakistan ,sea ,Kattupally port ,CHENNAI ,Chennai Customs ,Indian sea ,Dinakaran ,
× RELATED இஸ்லாமாபாத் செல்கிறாரா பிரதமர் மோடி?.....