- உலக மக்கள் தொகை நாள்
- துணை மேயர்
- சென்னை
- உலக மக்கள் தொகை நாள் விழிப்பு
- ரிப்பன் கட்டிட வளாகம்
- மகேஷ்குமார்
- தின மலர்
சென்னை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, துணை மேயர் மகேஷ்குமார் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 11ஆம் நாளை “உலக மக்கள் தொகை தினம்” என்று அறிவித்து, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (11.07.2024) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் தலைமையில் குடும்பநல உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவியருக்கு மதிப்பிற்குரிய துணை மேயர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடும்ப நலக் கட்டுப்பாட்டு முறைகள் (தற்காலிக மற்றும் நிரந்தர) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு விழிப்புணர்வு வாகனத்தினை மதிப்பிற்குரிய துணை மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிறப்பு முகாமானது, இன்று (11.07.2024) முதல் 24.07.2024 வரை பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 3 அவசரகால மகப்பேறு மருத்துவமனைகளிலும் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கருத்தடை சிறப்பு முகாமில் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். பானுமதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, துணை மேயர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! appeared first on Dinakaran.