பகுதி – 1
பல வருடங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். ஸ்ரீரங்கத்தில், ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, அன்று பிரதோஷமாக இருப்பதால், திருவானைக்காவலுக்கு வந்தேன். ஆலயத்தில் ஏகப்பட்ட கூட்டம். தரிசனம் முடிந்து வெளிேய வர சில மணி நேரம் ஆயிற்று! கோபுர வாசலுக்கு இரு புறமும் இருந்த பிச்சைக்காரர்களுக்கு, சில்லறைக் காசுகளை ஒவ்வொருவருக்கும் போட்டுக் கொண்டே வந்தேன். சற்றுத் தள்ளி தனியாக, ஏதோ ஜபித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியைப் பார்த்ததும், தூக்கிவாரிப் போட்டது!
காரணம், முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். அந்த மூதாட்டியை பார்த்ததுமே அவருக்கு யாருமே இல்லை என்பதனை அறிந்துக்கொண்டேன். அவரின் எதிரில் போய் நின்றேன். அவருக்குக் காசு போடுவதா, வேண்டாமா என்ற ஒரு தயக்கம்.“எங்கிட்டே வந்து நின்றபின் ஏன் தயங்கறே? போடு, போடு. இங்கே உட்கார்ந்திருக்கிறவங்களை எல்லாம் பிச்சைக்காரர்களாக நினைக்கக்கூடாது. ஜம்புலிங்கேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரியா நினைத்து, பிச்சை போடணும்” என்று சொன்னார். நான் தலையை ஆட்டியபடி, “நல்லா புரிகிறதம்மா! இருந்தாலும், என் மனசுல இருக்கறதை உண்ட கேட்டுறேன். தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றேன்.
“தாராளமா கேளு” என்று புன்னகைத்தார். “உங்கள பார்த்தா, வசதியான குடும்பத்துல வாழ்ந்த மாதிரி தெரியுது. உங்ககிட்ட என்னையும் அறியாம ஒரு பரிவும், பாசமும் வருது. அதனாலதான் கேக்கறேன்… நீங்க ஏன், கோயில் வாசல்ல பிச்சை எடுக்கணும்?” எனக் கேட்டதுதான் தாமதம். அந்தம்மாவின் கண்களிலிருந்து நீர் தழும்பியது. அந்த மூதாட்டி, என் பெயரையும் ஊரையும் கேட்டறிந்தார்.“என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?”“எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணியிருக்கேன். இங்கே திருச்சி ஸ்டீல் ரோலிங் மில்ஸ்ல ஒரு இன்டர்வ்யூவுக்காக வந்திருக்கேன்.”
“சரி.. ரமணி. நான் வயித்துப்பாட்டுக்காக இங்கே வந்து உட்காரலே! ஒரு தெய்வத்தோட கட்டளைக்குக் கட்டுப்பட்டு இங்கு வந்து உட்கார்ந்துருக்கேன்!” என்று மூதாட்டி கூறியதை கேட்டு எனக்கு ஆர்வம் அதிகமாயிற்று. மிகவும் தயக்கத்துடன், உங்களைப் பற்றி கொஞ்சம் விவரமா சொல்லுங்கள்” என்றேன். சட்டென்று, “அதைக் கேட்டுட்டு நீ என்ன பண்ணப் போறே?” என்றார் மூதாட்டி. தயக்கத்துடன் “ஒண்ணுமில்லே… ஏதாவது உதவி செய்யலாமே…” என்று நான் முடிப்பதற்குள், “அது யாராலயும் முடியாது. அகிலாண்டேஸ்வரி ஒருத்திதான் எனக்கு வழிகாட்ட முடியும். என் தெய்வம் சொன்ன வாக்குப்படி அவளை நம்பித்தான் இங்கே உட்கார்ந்திருக்கேன்” என்றார். திடீரென மழை தூற ஆரம்பித்தது.
அந்த மூதாட்டி, “ தூறல் போடுகிறது வா… எதிர்த்த வீட்டுத் திண்ணைக்குப் போயிடலாம். அதுதான் என் வாசஸ்தலம்” என்றபடி வேகமாக நடந்தார். நான் பின்தொடர்ந்தேன்.அந்த வீடு பூட்டியிருந்தது. இருந்தாலும் திண்ணைகள் பளிச் சென்று இருந்தன! ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மூதாட்டி, ஓரத்திலிருந்த ஒரு கித்தான் பையைச் சுட்டிக் காட்டியபடி, “அதுதான் என்னோட ஒரே உடைமை. அதுல ரெண்டு டவல், ஒரு விபூதிச் சம்புடம், மாத்துப் புடவை ஒண்ணு இருக்கு. அதோ… அந்த மூலைல ஒரு பாட்டில்ல காவேரி தீர்த்தம் தாகத்திற்கு” என்று கூறினார்.
“ராத்திரி சாப்பாடு?” என்று நான் கேட்டேன்.“ரெண்டு வாழை பழம் மட்டும்தான். காத்தால தெருக் கோடி ஹோட்டல்ல ரெண்டு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம். இவ்வளவுதான்” என்றார். நான் தயங்கியபடி, “இதெல்லாம் சரி. உங்களைப் பத்தி சொல்லுங்க தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை, உங்க பேரனா நினைத்து” என்றபடி அவரது காலில் விழுந்தேன். வியந்து போன அந்த மூதாட்டியின் கண்களில் நீர்.
தனது புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடியே, “சிவ.. சிவா! என்னைப் போய் நமஸ்காரம் பண்றயேப்பா. நான் ரொம்ப சாதாரணமானவ. ஏதோ என் தலைவிதி… பத்து பேர்ட்ட வாங்கி சாப்பிட்டு, இருக்கேன். சரி… அது போகட்டும். உனக்கு எங்கிட்டேருந்து என்ன தெரிஞ்சுக்கணும்?” என்று கேட்டார். நான் சற்று தாழ்ந்த குரலில், “உங்க பிறப்பிடம் எது? சொந்தங்கள் யாரும் கிடையாதா? அப்படி இருந்தா, எல்லாத்தையும் உதறிட்டு, தனியா இங்க வந்து ஏன் இருக்கணும்?” உணர்ச்சிவசப்பட்டு கேட்டதால் என் கண்களிலும் நீர்.
இதை கண்டு நெகிழ்ந்த மூதாட்டி, “இது வரைக்கும் யாரும் என் கிட்ட இப்படித் கேட்டதில்லை. இப்ப நீ கேட்டுட்ட. அதனால, என்னைப் பத்தி உங்கிட்ட சொல்லுறேன். ஆனால், எனக்கு நீ ஒரு சத்யம் பண்ணிக் கொடுக்கணும். நான் உயிரோடு இருக்கிற வரைக்கும், வேற யாருகிட்டேயும் ‘இதை’ சொல்லக் கூடாது!” என்றார்.நான் சிறிதும் யோசிக்காமல் சத்யம் செய்து கொடுத்தேன். அதன் பின் அந்த மூதாட்டி, “இப்போ மணி என்ன?” என்று கேட்டார். ஒன்பதரை என்று சொன்னேன். ஆலய வீதி அடங்கியிருந்தது. மூதாட்டி தொடர்ந்தார்;
“ரொம்ப மணி ஆயிடுச்சு.. நீ இன்னும்
எத்தனை நாள் திருச்சியில் இருப்பே!”
“ரெண்டு நாள்.”
“அப்டியானா நாளைக்கு ராத்திரி வந்துடு. எல்லாத்தையும் விவரமா சொல்றேன். அது சரி… என் பேரை நீ தெரிஞ்சுக்கவே இல்லையே! சொல்லட்டுமா? ராஜலட்சுமி! சரி, ஜாக்கிரதையா போய்ட்டு வா!” என்று விடை கொடுத்தார். உயர்ந்த ராஜகோபுரத்தை நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டேன்!மறு நாள் மாலை, சரியாக ஆறு மணிக்கு திருவானைக்காவலில் இருந்தேன். கோபுரவாசலில், அந்த ராஜலட்சுமி அம்மாளைக் காணோம். அக்கம் பக்கம் தேடினேன்.
என்னைக் கவனித்த ஒருவர், “ஏன் தம்பி! எங்க வாத்தியாரம்மாவைத் தேடுறீங்களா… அதோ, எதிர்த்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருப்பாங்க பாரு என்றார் சிரித்தபடியே! திண்ணையை நெருங்கிய நான், ராஜலட்சுமி அம்மாளை காலில் விழுந்து வணங்கினேன். தொங்க விட்டிருந்த கால்களை பட்டென்று மேலே தூக்கிக் கொண்ட ராஜலட்சுமி அம்மாள், “இதோ பாரு… இந்த இடத்துல அகிலாண்டேஸ்வரிதான் அம்மா! அவளைத்தான் எல்லாருமே வணங்கனும்?” என்று கண்டிப்பும் அன்பும் கலந்த குரலில் கூறினார்.
“சரி… என்னைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி, ஒரு தடவ அகிலாண்டேஸ்வரியை தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம், வா” என்றபடி திண்ணையைவிட்டு இறங்கினார். அகிலாண்டேஸ்வரிக்கு முன் கை கூப்பி நின்ற ராஜலட்சுமி அம்மாளின் கண்களில் தாரைதாரையாக நீர் வழிந்தது. கேவிக் கேவி அழுதபடி, “அகிலாண்டேஸ்வரி! உனக்கு மட்டுமே தெரிஞ்ச என் வாழ்க்கைச் சரிதத்தை இன்னிக்கு இந்த பையன் கிட்ட சொல்லப் போறேன். மனசுல திடத்தையும், சாந்தியையும் கொடுக்கணும்’’ என வணங்கி, கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு பிரசாதம் பெற்றுக் ெகாண்டு, திண்ணைக்குத் திரும்பினோம். நான் எதிர்த் திண்ணையில் அமர்ந்து கொண்டேன்.
“ரமணி! நான் சொல்லிக்கிட்டே வருவேன்… நீ கேட்டுக்கிட்டே வரணும். குறுக்கு கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. என்ன புரிகிறதா?’ என்றார். நான் சரி என்றேன். பின்னர், கண்களை மூடியபடியே பேசத் துவங்கனார். “நான் பொறந்தது, பாலக்காட்ல இருக்கிற கல்பாத்தி அக்ரஹாரம். திருமண வாழ்க்கைப் பட்டது, தென்காசிக்கு பக்கம் ஒரு சின்ன கிராமம்.” தவறுதலாக குறுக்கிட்ட நான், “அந்த கிராமத்தின் பெயர் என்ன?” என்று கேட்டுவிட்டேன். ராஜ லட்சுமி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது.“குறுக்குக் கேள்வி கேக்கக்கூடாது. இதுக்காகத்தான் நான் முன்கூட்டியே சொன்னேன்! ஊரை சொல்ல மாட்டேன்” என்றார். தலையாட்டியபடி கை கூப்பினேன் நான். ராஜலட்சுமி அம்மாள் தொடர்ந்தார்!
“அந்த கிராமத்துல, இருந்த டிஸ்டிக்ட் போர்டு எலிமென்ட்ரி ஸ்கூல்ல, என் கணவர் வாத்தியாரா இருந்தார். பேரு – விஸ்வநாத ஐயர். எல்லாரும் ‘விஸ்வம் சார்னு’ அன்பா கூப்பிடுவாங்க! தலைல கட்டுக் குடுமி. சிவப்பா, நல்ல ஒசரமா… சிரிச்ச முகத்தோட இருப்பார். கோபமே வராது அவருக்கு! எங்க பிறந்த வீட்டுல, நான் கொஞ்சம் ‘கோவக்காரி’னு பெயர் எடுத்தவ. இவரோடு வந்துதான், கோபம் போய் ‘சாந்த ராஜலட்சுமி’யா மாறினேன். அந்த ஊருல அவருக்கு சொந்த வீடு. பரம்பரை வீடு அது. சம்பளம் ரொம்ப குறைவு. நான் வாழ்க்கைப்பட்டுப் போன புதுசுல, என் மாமனார் – மாமியார்கூட இருந்தாங்க. என் கணவருக்கு உடன் பிறப்பு கிடையாது. நான் வந்த ரெண்டு, மூணு வருஷத்துக்குள்ளே மாமனார் – மாமியார் ரெண்டு பேரும் அடுத்தடுத்துப் இறந்துட்டாங்க.
தன் அப்பா – அம்மாகிட்ட ரொம்ப மரியாதையா இருப்பாரு என் கணவர். அவங்க ரெண்டு பேரும் காலமாகி, ஒரு வருடம் பிறகு, எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.சங்கரன்கோவிலுக்குப் போய் வணங்கி பிறந்ததால், குழந்தைக்கு சங்கரநாராயணன்னு பெயர் வெச்சோம். அடுத்த ரெண்டு வருடத்துல பொண்ணு பொறந்தா. அவளுக்கு எங்க குலதெய்வமான இந்த அகிலாண்டேஸ்வரி பேரையே வெச்சோம். அப்புறம், மூணாவதா ஒரு பிள்ளை; சந்திரசேகரன்னு பேர். என் கணவர், நாலஞ்சு டியூஷனுக்கு சென்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு டியூஷனுக்கு மாசம் ரெண்டு வரும்! எவ்வளவு பெரிய தொகை பாத்தியா! எங்கள் குழந்தைகள் வளர்ந்து பள்ளிக் கூடப் படிப்பு முடிஞ்சு, ஹைஸ்கூல் படிப்புக்குத் தென்காசி போனார்கள்! என் பொண்ணு அகிலாண்டேஸ்வரி, பதினாலாவது வயசுல பூ பருவம் அடைந்ததால, ஒன்பதாம் கிளாசோடு, அவள் படிப்பை நிறுத்திட்டோம்! பெரியவன், பிரைவேட் பேங்குல கிளார்க் வேலை கிடைச்சுது. ரெண்டாவது பையன் சந்துரு, இன்டர் மீடியட் வரை காலேஜ்ல படிச்சான். அதுக்கு மேல அவனை படிக்க வைக்க கையில பணமில்லே! குடும்பத்துக்கு ரொம்பவும் வேண்டிய ஒருத்தர் ரெகமெண்டேஷன் செய்து, அவனுக்கு ஜாம்ஷெட்பூர் ‘டாடா’ இரும்புத் தொழிற்சாலையில டைப்பிஸ்ட் வேலை கிடைச்சுது.
இந்த நேரத்துல, என் கணவருக்கு மலேரியா ஜுரம் வந்து, மாசக் கணக்காக படுக்கைல விழுந்துட்டார். ஒரு வழியா தேறி எழுந்திருந்தும், பள்ளிக் கூடம் போய் பாடம் நடத்த முடியலே. பாதியிலேயே வேலையை ராஜினாமா செய்துவிட்டார்! அகிலாண்டத்துக்கு 16 வயது பொறந்ததும் வரன் தேட ஆரம்பிச்சோம். மதுரைலேர்ந்து நல்ல வரன் ஒண்ணு வந்துச்சு! பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த பையன். பூர்வீகம் சோழவந்தான். ராமசுப்பிரமணியம்னு பேரு. மதுரை, ஹார்வி ஸ்பின்னிங் மில்ஸ்ல சூப்ரவைசர் வேலை.
கை நெறய சம்பளம்! எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, கல்யாணத்தை நடத்தி வைக்க கையில காசில்லே. வேண்டியவர்கள் கிட்ட எல்லாம் கேட்டுப் பார்த்தார், என் கணவர். ஆனா, ஒன்னும் கிடைக்கல! பெரியவன் சங்கரநாராயணனை, எப்படியாவது கொஞ்சம் பணம் புரட்டிக் கொடுனு கேட்டோம். முயற்சிப்பதாக சொல்லிவிட்டு, ரெண்டே நாள் கழித்து, இல்லை என்று கைய விரிச்சுப்டான்! சின்னவனுக்கும் விவரமா கடிதம் எழுதினார், என் கணவர். அவன் பதிலே போடலை…’’ இந்த இடத்தில், துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார் ராஜலட்சுமி அம்மாள்.
எனக்கும் மனம் வருத்தமாக இருந்தது! சிறிது நேரத்தில், தன்னை சுதாரித்துக் கொண்ட ராஜலட்சுமி அம்மாள், மீண்டும் பேசத் தொடர்ந்தார்;“கடைசியா நாங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தோம். பரம்பரை வீட்டை வித்து, அகிலாண்டேஸ்வரி கல்யாணத்தை நடத்தலாம் என்று முடிவு பண்ணினோம். உள்ளூர் மிராஸ்தார் கிருஷ்ணய்யர் கிட்ட, ரெண்டாயிரம் ரூபாவுக்கு வித்தோம். அகிலாண்டேஸ்வரி கல்யாணம் மிக சிறப்பாக, தென்காசி சத்திரத்துல நடந்து முடிஞ்சுது! மாப்பிள்ளை ராமசுப்பிர மணியத்தோடு மதுரைக்குத் தனிக் குடித்தனம் பண்ண பொறப்பட்டாள், அகிலாண்டேஸ்வரி! வித்துட்ட வீட்டுக்கே மாசம் நாலு ரூவா வாடகை கொடுத்து குடியிருந்தோம். அப்போ அவருக்கும் வயசாயிடுச்சு.. எனக்கும் கொஞ்சம் தள்ளாமை.
இருந்தாலும், எங்க ரெண்டு பேரோட பந்தம் மட்டும் துளிகூட குறையலே. சந்தோஷமா இருந்தோம்…!” என்று சொல்லி முடித்ததும், ஆலயத்திலிருந்து கணீரென மணியோசை கேட்டது! திண்ணையை விட்டுக் கீழிறங்கிய ராஜலட்சுமி அம்மாள், “அர்த்தஜாம பூஜா மணி சத்தம். போய் தரிசனம் செய்துவிட்டு வந்துடலாம். வா… வா…” என்றபடியே வேகமாக நடந்தார். ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்தேன்.
(தொடரும்)
ரமணி அண்ணா
The post அற்புதம் தருவாள் அகிலாண்டேஸ்வரி appeared first on Dinakaran.