தெளிவு பெறு ஓம்
கிரக தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது, அதற்கு என்ன பரிகாரம்?
– குருசந்திரன், வந்தவாசி.
பதில்: நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்தால், இப்பொழுது பெரும்பாலான திருமணங்கள் கிரக தோஷத்தால் தடைப்படுவதாகத் தெரியவில்லை. கிரகத்தில் உள்ளவர்கள் (வீட்டில் உள்ளவர்கள்) தோஷத்தால் தடைபடுவதாகத்தான் தெரிகிறது. மிக அதிக எதிர்பார்ப்பு, பேராசை போன்ற பல விஷயங்கள் இப்பொழுது திருமண பந்தத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதைத்தான்.
இதே ராகு – கேது, செவ்வாய் தோஷம் உள்ள அத்தனை பேருக்கும், 30 வருடங்களுக்கு முன் இருந்தாலும், சரியான காலத்தில் திருமணம் நடந்தேறியதையும் நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது இல்லாத தோஷம் இப்பொழுது எங்கே வந்துவிட்டது? ஆயினும், ஒரு பரிகாரத்தைச் சொல்லுகின்றேன். தினமும் காலையில் குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி “வேயுறு தோளிபங்கன்” எனத் தொடங்கும் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யுங்கள். அது கிரக தோஷத்தையும், கிரகத்தில் உள்ளவர்கள் தோஷத்தையும் போக்கும்.
? சத்சங்கம் ஒருவனுடைய குணத்தை மாற்றுமா?
– வள்ளியம்மை, கும்மிடிப்பூண்டி.
பதில்: என்ன இப்படி கேட்கிறீர்கள். மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தானே சத்சங்கம். ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்குப் பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.
மதிய நேரத்தில், சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால், காத்திருக்க நேரிடுமே என்பதால், கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால்கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்துவிடுவேன்,” என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன். கடைக்காரரும் கிளம்பிவிட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம், காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.
பணப் பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான். ‘‘அடேய்! திருடுவதற்கு இதைவிட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடிவிடலாம்,” என்று யோசனை கூறினான். திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம்… தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், “தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்துவிட்டான். சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்துவிட்டார். அவரிடம், ‘‘எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.
கடைக்காரரோ, ‘‘ஏன் இப்படிக் கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால் பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை,” என்றார். கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும், திருடனின் வருத்தம் அதிகரித்தது. “உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே. வாழ் நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான். கடைக்காரர், ‘‘நீ சொல்வது புரியவில்லையே!”, என்றார்.
‘‘ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடிவிட்டு ஓட எண்ணினோம். ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்துவிட்டது. ‘‘இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான். ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். இதை விளக்கும் பாடல் ஒன்று உள்ளது.
“நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் உண்டாம் நயமது போல் நல்ல
குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவே யாம் சேர்த்தி கொண்டு’’
? கடவுள் இந்த உருவத்தில்தான் இருக்கிறான் என்று நினைத்து அவனுக்கு ஒரு உருவத்தை கற்பித்து வணங்குவது சரியான முறையாக இருக்குமா?
– வி.லட்சுமி, ராயக்கோட்டை.
பதில்: இதற்கு பலர் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். இன்ன உருவத்தில் கடவுள் இருப்பாரா என்று கேட்கின்ற நீங்கள், இந்த உருவத்தில் இருக்க மாட்டார் என்று மட்டும் எப்படிச் சொல்வீர்கள்? இரணியன் பிரகலாதனிடம், இந்தத் தூணில் உன் கடவுள் இருப்பானா என்று கேட்கும் பொழுது, ‘‘இருப்பான்’ என்று சொல்ல, அந்தத் தூணில் இருந்து வெளிப்படுகின்றார் கடவுள்.
அப்படி வெளிப்படுகின்ற பொழுது இரணியன் வாங்கிய வரத்துக்குத் தக்கபடி தன்னுடைய உருவத்தை நரசிங்கமாக எடுக்கின்றான். அப்படியானால் நரசிங்கம்தான் அவன் உருவமா என்றால், வாமன அவதாரத்தில் திரிவிக்கிரமனாக நிற்கிறான். அதுதான் அவருடைய வடிவமா என்று சொன்னால், வராக அவதாரத்தில் பன்றி ரூபத்தில் வருகிறான். இதிலிருந்து அவன் எந்த உருவத்திலும் இருக்கக் கூடியவன் என்பது தெரிகிறது அல்லவா! எல்லா உருவத்திலும் இருக்கக் கூடியவன், நாம் வடிவமைத்து, இந்த உருவத்தில் இருக்கின்றான் என்று நம்புகின்ற உருவத்தில் எப்படி இல்லாமல் இருப்பான்?
? சிலர் கோபத்தில் பிறரைத் திட்டும் போது முட்டாள் என்று சொல்லித்
திட்டுகின்றார்களே?
– தயாளன், மேடவாக்கம்.
பதில்: பொதுவாக அறிவாளிகள் இந்த வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை. காரணம், அறிவாளிகள் பிறரை முட்டாள் என்ற திட்டுவதற்கு முன், தாம் அறிவாளிகள் இல்லை என்று உணர்வார்கள். ஒரு ஞானி சொன்னார். என் குறையை அகற்றுவதே எனக்கு பெரிய துன்பமாக இருக்கின்ற பொழுது, இறைவன் மற்றவர்களுக்கு சரியான அறிவை கொடுக்கவில்லையே என்று வருந்துவதற்கு எனக்கு நேரமில்லை என்றார். பிறரை திட்டுவதற்கு முன், அந்தத் தகுதி நமக்கு இருக்கிறதா என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.
? திருப்தி என்பது வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
– பாபுகுமார், திருப்பதி.
பதில்: திருப்தி என்பது ஒரு மனநிலை. (state of mind) அந்த மனநிலையை நாம் நம்முடைய நேர்மையான சிந்தனையால் உருவாக்கிக் கொள்ள முடியும். அது பொருள் களினால் வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே, திருப்தி வந்துவிடும். தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாதவன் எத்தனைப் பொருள்கள் வந்தாலும் திருப்தி அடையமாட்டான். திருப்தி அடையாதவன் வாழ்வில் நிஜமான சந்தோசம் இல்லை. இருக்கின்ற பொருள்களும் அவனுக்கு மகிழ்ச்சியைத் தராது.
? இவர் நம்மை நிஜமாகவே நேசிப்பவர் என்பதை எப்போது புரிந்துகொள்ள முடியும்?
– தீபாசுரேஷ், சாத்தூர்.
பதில்: நமக்கு ஒரு கஷ்டம் வரும்போதுதான் புரிந்துகொள்ள முடியும். நாம் நன்றாக இருக்கின்றபொழுது நம்மிடம் அன்பு பாராட்டுவதற்கு அதிகம் பேர் இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரும் நிஜமாகவே அன்பு பாராட்டுபவர்கள் அல்லர். பலர் அன்பு பாராட்டுவதாக நடிப்பவர்கள். அதே நேரத்தில், நமக்கு ஒரு துன்பம் வருகின்ற பொழுது, அதில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை கணக்கிடும் போதுதான் நம்மிடம் நிஜஅன்பு வைத்தவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும்? அதனால்தான் பெரியவர்கள் மனிதர்களை புரிந்துகொள்வதற்கு துன்பமும் உதவும் என்றார்கள்.
? வியப்பூட்டும் அதிசயத்தக்க செயல்கள் செய்பவர்கள், மஹான்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
– பத்மஸ்ரீ, தஞ்சை.
பதில்: மஹான்களின் இலக்கணம் அதிசயமான செயல்கள் மட்டும் அல்ல. அதை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால், அப்படிச் சில செயல்களும் அவர்கள் வாழ்வில் நடக்கும். அதை அவர்கள் செய்ததாகச் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ராமன். தான் பெற்ற வெற்றியை “வீடணன் தந்த வெற்றி” என்று சொல்லியதைப் போல் மற்றவர்கள் செய்ததாகப் பாராட்டுவார்கள். ஸ்ரீரமணர் ஆசிரமத்தில், நடந்த சம்பவம் இதை ஓரளவு விளக்கும். ஆரம்ப நாட்களில் ஆச்ரமம் எளிய முறையில் நடந்து வந்தது.தேவைகளோ சௌகரியங்களோ மிகவும் குறைவு. அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறைவேற்றக் கூடிய வரவு. சமையலறையில் வயது முதிர்ந்த பெண்கள் சமையல் செய்து வந்தனர்.
அன்று ஒரு நாள் சாந்தம்மாள் ஆச்ரமத்திலுள்ளவர்களுக்கு மட்டுமே உணவைச் சமைத்திருந்தாள். அப்பொழுது பகவான் தரிசனத்திற்கு வெளியூரிலிருந்து பத்து பதினைந்து பக்தர்கள் எதிர்பாராத விதம் வந்தனர். அவர்கள் வந்தது உணவு அருந்தும் நேரம். வெயிலும் கடுமையாக இருந்தது. அக்காலத்தில் ஆஸ்ரமம் ஊருக்கு வெளியே இருந்ததினால் சாப்பிட வேண்டுமானால் ஊருக்குள் தான்போக வேண்டும். ஆஸ்ரமத்தில் உணவிற்கான மணி அடிக்கும் நேரம் நெருங்கியது. சாந்தம்மாளுக்கு ஒரே கவலை.
இனி சமைத்துப் போடவும் நேரமில்லை. சாப்பாட்டு மணி அடித்ததால் பகவான் அங்குள்ள அனைவரையும் சாப்பிட வருமாறு அழைப்பார். இதை நன்கு அறிந்த சாந்தம்மா, சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பகவான் அருகில் சென்று, ‘‘பகவான் இங்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சமையல் செய்திருக்கிறேன்!’’என்று கையைப் பிசைந்த வண்ணம் கூறினார்.
ஆனால் பகவான் அதைக் கேட்ட மாதிரியே தோன்றவில்லை. சமையலறைக்குள் சென்ற சாந்தம்மா ஒன்றும் தோன்றா வண்ணம் நின்றார். அருகிலிருந்த மாதவஸ்வாமி நிலைமையை புரிந்துகொண்டு;‘‘கவலைப்படாதீர்கள்! நாம் இலையைப் போட்டு எல்லோருக்கும் பிரசாதமாக கொஞ்சம் கொஞ்சம் பரிமாறுவோம்’’ என்றார். மணியும் அடித்தது. எதிர்பார்த்தது போல் பகவானது கமிக்ஞையின்படி அனைவரும் வந்து உணவுக்கூடத்திற்குச் சென்று இலையின் முன் அமர்ந்தனர். சாந்தம்மாள் பரிமாற ஆரம்பித்தாள்.
பாத்திரத்தில் சாதம் எடுக்கும்போதெல்லாம் கவலையுடன்;‘‘ரமணா, ரமணா!’’ என்று வேண்டிக் கொண்டே எடுத்தார். என்ன ஆச்சரியம்! சாதம் எடுக்க எடுக்கக் குறையாமல், வந்திருந்த அனைவருக்கும் போதுமானதாக இருந்தது. எல்லோரும் பசிதீர உண்டு திருப்தியுற்றனர். மேலும் பல அன்பர்கள் சாப்பிடும் அளவுக்கு உணவு மீதமிருந்தது. சாந்தம்மாளுக்கு ஒரே ஆச்சரியம். மாலை வேலைகளில் பகவான் ஹாலுக்கு வெளியே திறந்த கூடத்தில் மலையை நோக்கியவாறு ஒரு சாய்வு நாற்காலியில் அமருவார். அவரைச் சுற்றி மிகச் சிலரே இருப்பர். இந்த நேரத்தில் சாந்தம்மாள் பகவானிடம் நெருங்கி ‘‘பகவானே! இன்று பெரிய அதிசயம்!நான் இங்குள்ளவர்களுக்கு மட்டுமே சமைத்திருந்தேன். ஆனால், மேற்கொண்டு வந்த பக்தர்கள் எல்லோரும் வயிறாரச் சாப்பிட்ட பிறகும் பத்துப் பேர் உணவு மீதமிருந்தது. இது பகவானது பெரிய ஸித்திதான்’’ என்று வியப்புடன் கூறி நின்றார்.
‘‘ஓ! மணி அடிப்பதற்கு முன் நீ என்னிடம் வந்து ஏதோ சொன்னாய்!’’ என்று கூறிய பகவான், சாந்தம்மாவைப் பார்த்து ‘‘இன்று யாருடைய சமையல்?’’ என்றார். ‘‘நான்தான் செய்தேன் பகவானே!’’ என்றார் சாந்தம்மாள்.உடனே பகவான், ‘‘ஆகவே அந்த சித்தி உனக்குத்தான் இருக்கிறது! நீதான் சமைத்தாய்!’’ என்று அந்தப் பெருமையை அவளுக்கே உரியதாக்கினார்.
? அஷ்டமச் சனி, ஏழரைச் சனி போன்ற கஷ்ட காலங்களில் சனியை எப்படி வழிபடுவது? அதன் பாதிப்பிலிருந்து எப்படித் தப்பிப்பது?
– புரந்தர், ஆவடி.
பதில்: சனி என்பது வேகக்குறைவைக் குறிக்கும். சோம்பலைக் குறிக்கும். அவர் விந்தி விந்தி நடப்பதால், உடல் ஊனத்தைக் குறிக்கும். எனவே, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்பில் இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். கறுப்பு நிற ஆடை, போர்வை, கம்பளி தானம் செய்யுங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். இவைகள் காலம் காலமாகச் செய்யப்படும் பரிகாரங்கள். ஆனால், இதற்கு மேல் கொண்டு நான் சொல்லுகின்றேன். இந்த காரியத்தை இன்றே முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டு முடியுங்கள். நல்ல ஆலோசனைகளைக் கேட்டு காரியங்களை செய்யுங்கள். யாருக்கும் எந்த தீமையும் நினைக்காதீர்கள். இதைச் செய்தாலே, பெரும்பாலும் சனிதோஷத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
தேஜஸ்வி
The post அஷ்டம சனி, ஏழரைச் சனி போன்ற கஷ்ட காலங்களில் சனியை எப்படி வழிபடுவது? appeared first on Dinakaran.