×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 82 சதவீதம் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைதேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மொத்தம் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.

அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை. கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற பிரசாரம் 8ம்தேதி மாலை ஓய்ந்தது. தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆண் வாக்காளர்கள் 1,16,962, பெண் வாக்காளர்கள் 1,20,040, திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க ஏதுவாக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச் சாவடிகளில் 1,355 அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். 552 மின்ணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 276 கட்டுபாட்டு கருவிகள், 276 விவிபேட் கருவிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெயில் அதிகமான பகுதியில் சாமியானா பந்தல், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள், இளம்தலைமுறை வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்களித்தனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்வுதள வசதி மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேர்தலையொட்டி இந்த தொகுதிக்கு மட்டும் நேற்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 10 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ஒருமணி நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மிக பதற்றமான 3 வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 44 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா காலை 7 மணிக்கே அன்னியூரில் குடும்பத்துடன் முதல்நபராக வந்து வாக்களித்தார். இதேபோல், பாமக வேட்பாளர் அன்புமணி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான பனையபுரம் அரசு பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார்.

காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகளும் பதிவாகின. 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 2019 இடைத்தேர்தலைவிட 6.48% கூடுதலாகும். கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இங்கு 72.78 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதை ஒப்பிடுகையில் 9.7% அதிகமாகும்.

இதனிடையே மாலை 6 மணிக்கு கியூவில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேட்பாளர்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து துணை ராணுவம் உள்ளிட்ட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.

* போலீசாருடன் பாமகவினர் மோதல்
அமைதியாக வாக்குப்பதிவு நடந்த நிலையில் மதியம் 1 மணிக்குமேல் பல வாக்குச்சாவடிகள் முன்பு பாமகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கக்கனூர் வாக்குச்சாவடியில் பாமக வேட்பாளர் அன்புமணி வாக்குப்பதிவு நிலவரத்தை பார்க்க சென்றார். அவருடன் பலர் கூட்டமாக வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் மற்றும் பாமகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, பதிலுக்கு போலீசாரும் தேர்தல் விதிகளை கடைபிடிக்குமாறு கூற மோதல் அதிகரித்தது.

அதிகாரிகள் தலையிட்டு பாமக வேட்பாளர், கட்சியினரை அமைதிப்படுத்தினர். ஆசூரில் பதற்றமான வாக்குசாவடியில் பாமக வழக்கறிஞர் பாலு சென்றார். அவருடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கவிதா தடுக்கவே அவருடன் பாமகவினர் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் துணை ராணுவத்தினர் கும்பலை கலைத்து அனுப்பினர். இதேபோல், தொரவி வாக்குச்சாவடி அருகே நின்றிருந்த பாமகவினரை போலீசார் அப்புறப்படுத்தியபோது, மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

* மணக்கோலத்தில் வந்து வாக்களிப்பு
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்த தேவகிக்கும் (24), சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (29) என்பவருக்கும் நேற்று புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமக்கள் ஆசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றனர். அங்கு மணப்பெண் தேவகி வாக்களித்தார். இதேபோல் விக்கிரவாண்டி ராதாபுரம் தொடக்க பள்ளி வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் கௌஷிக் (29), ஜோதிகா (25) நேற்று வந்தனர். அங்கு ஜோதிகா தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் கப்பியாம்புலியூர் பகுதியை சேர்ந்த அஜித்குமாருக்கும், சந்தியா என்பவருக்கும் நேற்று திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் கப்பியாம்புலியூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று இருவரும் மணக்கோலத்திலேயே வாக்களித்தனர். ‌இதேபோல் விக்கிரவாண்டி அருகே மாங்குப்பம் பகுதியை சேர்ந்த வேல்முருகனுக்கும், விக்கிரவாண்டியை சேர்ந்த மகாலட்சுமிக்கும் நேற்று திருமணம் நடந்தது. பின்னர் இவர்கள் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

* பெண்ணுக்கு கத்திக்குத்து
விக்கிரவாண்டி தாலுகா அடங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி (49). கணவர் இறந்துவிட்டதால் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில் 2 பிள்ளைகளுடன் வசிக்கிறார். இவர் அடிக்கடி அடங்குணம் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (65) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்த 6 மாதம் மட்டுமே வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கனிமொழி 2வது கணவரை விட்டு பிரிந்து வேட்டவலத்தில் வசித்து வருகிறார். அவர் வாக்களிப்பதற்காக நேற்று அடங்குணம் வந்தார். டி. கொசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 40ல் கனிமொழி வாக்களிக்க சென்றார். அங்குவந்த ஏழுமலை என்னை தவிக்க விட்டு போய்விட்டயே என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பேனாகத்தியால் கனிமொழியின் கழுத்தில் குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த கனிமொழியை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கஞ்சனூர் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 82 சதவீதம் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Villupuram ,Vikravandi by-elections ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்