திருச்சி: ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க மறுத்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் செய்வதால், 3 மாஜி அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு இருக்கும் தகவல் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். தொடர்ந்து பொது செயலாளர் ஆனதும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதைதொடர்ந்து எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. எனவே அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், இவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கடந்த 8ம்தேதி சந்தித்து பேசினர். அப்போது ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்ப்பதன் மூலம் கட்சி வலுப்பெற வாய்ப்புள்ளதாக அவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். இந்த சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 3 முன்னாள் அமைச்சர்கள், சசிகலாவை விரைவில் சந்திக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, சில தினங்களுக்கு முன் டெல்டா மாவட்டத்தில் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது காரில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது கட்சியில் சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு என எடப்பாடியிடம் காமராஜ் கேட்டாராம். இதை ஆமோதிப்பது போல் மற்ற 2 பேரும் தலையாட்டியுள்ளனர். அதற்கு அவர், எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையாம். இதனால் எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்து வந்த காமராஜ் திடீரென சிங்கப்பூர் சென்றாராம். தனது பேரக்குழந்தையை பார்க்க சிங்கப்பூர் சென்றதாக கூறப்பட்டாலும், எடப்பாடி மீதான அதிருப்தியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பிய நிலையில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் போர்க்குரல் வெடிக்கும் என்றனர். 3 மாஜி அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறப்படும் தகவல் டெல்டா மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம்; சசிகலாவை விரைவில் சந்திக்க 3 மாஜி அமைச்சர்கள் திட்டம்: அதிமுகவில் பரபரப்பு appeared first on Dinakaran.