- பிற்பகல்
- பிரதமர் மோடி
- வியன்னா
- மோடி
- இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு
- ஆஸ்திரியா
- மாஸ்கோ
- கார்ல் நெஹ்மர்
- தின மலர்
வியன்னா: இந்தியா, ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாஸ்கோவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரியா நாட்டிற்கு வந்தடைந்தார். தலைநகர் வியன்னாவில் பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெஹம்மர் உற்சாக வரவேற்பு அளித்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். சுமார் 41 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரியா சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். கடைசியாக, 1983ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இதனால் பிரதமர் மோடிக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, ஆஸ்திரியா பிரதமர் நெஹம்மரின் இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு இரு தலைவர்களும் கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது: பிரதமர் நெஹம்மரும் நானும் மிகவும் பயனுள்ள ஆலோசனை நடத்தினோம். இதில், எங்கள் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பான அடித்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், ரஷ்யா, உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலவரம் என உலகம் முழுவதும் நடந்து வரும் போர்கள் குறித்து பிரதமர் நெஹம்மருடன் நீண்ட நேரம் பேசினேன். இது போருக்கான நேரம் அல்ல என நான் முன்பே கூறியிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எந்த பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது. இந்தியாவும், ஆஸ்திரியாவும் பேச்சுவார்த்தையையும், அமைதியையும் வலியுறுத்துகின்றன. அதற்கான எந்த ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவும், ஆஸ்திரியாவும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டிக்கின்றன. எந்த வகையிலும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, அதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது என்பதில் உறுதியாக உள்ளன. எனது 3வது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட நலன்கள் எங்கள் உறவை வலுப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் பயனுள்ள சீர்திருத்த மேற்கொள்ள நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இதைத் தொடர்ந்து, ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்.
ஆஸ்திரியா நிறுவனங்களுக்கு அழைப்பு: வியன்னாவில் ஆஸ்திரியா நாட்டின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த சிஇஓக்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் நெஹம்மருடன் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்து, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் பங்கு முக்கியமானது: பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு ஆஸ்திரியா பிரதமர் நெஹம்மர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து நாங்கள் மிகவும் தீவிரமான ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் அமைதி நடவடிக்கைக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதி முயற்சியில் நடுநிலை நாடாக பாலமாக செயல்பட ஆஸ்திரியா தயாராக உள்ளது’’ என்றார்.
The post ஆஸ்திரியா பிரதமருடன் பேச்சுவார்த்தை இது போருக்கான நேரம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.