×

இந்தியன் ஆயில் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்: 26ல் தமிழகம் முழுவதும் போராட்டம்

தண்டையார்பேட்டை: இந்திய ஆயில் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் வரும் 26ம்தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், இந்தியன் ஆயில் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து கொருக்குப்பேட்டையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று நடந்தது. நிறுவனம் உள்ள தண்டை யார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் ஆங்காங்கே லாரிகளை நிறுத்திவைத்துள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘தண்டையார்பேட்டை அத்திப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகள் குண்டும் குழி யுமாகவும் தரமற்றதாகவும் உள்ளது. மேலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறுவதால் மாற்று வழியில் லாரி களை இயக்கி சென்றால் அதிக கிலோ மீட்டர் தூரம் ஆகிறது. அதற்குண்டான டீசல் பணமும் தருவதில்லை. 3500 ரூபாய் வாடகை வாங்கும் பட்சத்தில் அவ்வழியாக சென்றால் போலீசார் 500, 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் சூழல் உள்ளது.

சிறு பிரச்னைக்குகூட ஐஓசிஎல் நிர்வாகம் தங்களது லாரிகளின் மீதான ஒப்பந்தத்தை ரத்து செய்து சர்வாதிகார போக்கில் ஈடுபடுகிறது. இதனால் 8 மாத காலமாக வேலையில்லாமல் டேங்கர் லாரிகள் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். நகர்புறத்தில் லாரிகள் செல்வதற்கு அனுமதி வழங்கவேண்டும். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். உடனடியாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் வரும் 26ம்தேதி தமிழக முழுவதும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களில் செயல்படும் டேங்கர் லாரிகளை ஒன்றிணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர். 300க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

The post இந்தியன் ஆயில் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்: 26ல் தமிழகம் முழுவதும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Oil administration ,Tamil Nadu ,Dandiyarpettai ,Tanker ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...