×
Saravana Stores

காட்டு யானைகள் முகாம்: சுருளி அருவியில் குளிக்க தடை

கம்பம், ஜூலை 10: கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது சுருளி அருவி. தென் காளகஸ்தி என்றழைக்கப்படும் இந்த அருவி மேகமலை வன உயிரின கிழக்குச்சரகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேகமலை அருகே உள்ள தூவானம், ஈத்தக்காடு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலிருந்தும், கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தருகின்றனர். வருடத்திற்கு 9 மாதங்களுக்கு மேல் நீர்வரத்து உள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அருவியில் குளிப்பதற்கு நுழைவு கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. சுருளி அருவி சுற்றுலா தலமாக மட்டுமின்றி ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது முதல் அனைத்து விதமான முன்னோர் வழிபாட்டு சடங்குகள் இங்கு செய்யப்படுகிறது. இதற்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து அருவியில் குளித்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் அருவி பகுதியில் நேற்று காலை முதல் யானை கூட்டம் முகாமிட்டுள்ளன. இவை அப்பகுதியியே சுற்றி வருகின்றன. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘சுருளி அருவியில் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. யானைகள் இடம் பெயர்ந்தபின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர்’’ என்றனர்.

 

The post காட்டு யானைகள் முகாம்: சுருளி அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Elephant ,Suruli Falls ,Kampam ,Western Ghats ,South Kalakasti ,Meghamalai Forest Department ,Thuvanam ,Itthakadu ,Meghamalai ,Wild Elephant Camp ,
× RELATED விழுப்புரம் அருகே யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின