ரேபரேலி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான ரேபரேலி சென்ற ராகுல் காந்தி, அங்கு கீர்த்தி சக்ரா விருது வென்ற வீரரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள காங்கிரசின் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மணிப்பூர், அசாம் மாநிலங்களுக்கு சென்று இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, தனது சொந்தத் தொகுதியான உபி மாநிலம் ரேபரேலிக்கு ராகுல் நேற்று சென்றார்.
டெல்லியில் இருந்து லக்னோவுக்கு விமானத்தில் சென்ற அவர், காரில் ரேபரேலி சென்றார். வழியில் பச்சரவான் பகுதியில் உள்ள சுர்வா கோயிலில் ஹனுமனை ராகுல் வழிபட்டார். ரேபரேலியில் அவர் உள்ளூர் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். மேலும், உள்ளூர் கட்சி நிர்வாகிகளையும், தொழில்துறையினரையும் ராகுல் சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களை காப்பாற்றும் முயற்சியில் வீரமரணம் அடைந்த ராணுவ கேப்டன் அன்சுமன் சிங்கிற்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினரை ராகுல் சந்தித்து பேசினார்.
ராகுலை சந்தித்த பின் பேட்டி அளித்த அன்சுமனின் தாய் மஞ்சு சிங் கூறுகையில், ‘‘அக்னி வீரர் திட்டம் மூலம் ராணுவத்தை 2 விதமாக பிரிக்கக் கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். 4 ஆண்டு ராணுவ சேவைக்கு பின் அக்னி வீரர்கள் படிப்பை தொடர முடியாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே இது நல்லதல்ல. இந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசை வலியுறுத்துவதாக ராகுல் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.
The post ரேபரேலி பயணத்தில் உயிர் தியாகம் செய்த வீரரின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் : அக்னி வீரர் திட்டத்திற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.