மதுரை: வெளிநாட்டு மருத்துவம் படித்தோருக்கான ஸ்கிரீனிங் தேர்வு விதிகளில் திருத்தம் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கேசவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். இங்கு மருத்துவராக பணி புரிய பதிவு செய்வதற்காக இந்திய மருத்துவ கழகத்தை நாடினார். வௌிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் பணிசெய்ய ஸ்கிரீனிங் டெஸ்ட் (மதிப்பீட்டு) எழுதுவது அவசியம் என கூறினர். இந்நிலையில் ஸ்கிரீனிங் டெஸ்டில் 150 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையில் எனக்கு 149 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
தேர்வு முடிவு வௌியான பிறகு மறுமதிப்பீடு, மற்றும் மறுகூட்டல் கோரி தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க இயலாது. இதனால், வெளிநாட்டில் மருத்துவம் படித்த பலரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான ஸ்கிரீனிங் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வது தொடர்பான விதிகளை தளர்த்தி, புதிய விதிகளை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய அரசு மற்றும் இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
The post வெளிநாட்டு மருத்துவம் படித்தோருக்கான ஸ்கிரீனிங் தேர்வு விதிகளில் திருத்தம் செய்ய கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.