×
Saravana Stores

பாஜக எம்எல்ஏக்களிடம் முதல்வர் ரங்கசாமி பாகுபாடு காட்டுவதாக குற்றசாட்டு: புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி

புதுச்சேரி: பாஜக எம்எல்ஏக்களிடம் முதல்வர் ரங்கசாமி பாகுபாடு காட்டுவதாக குற்றசாட்டுவைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவினரிடையே தற்போது மிக பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்களின் செயல்பாடுகளே தேர்தல் தோல்விக்கு காரணம் என பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன், கொல்லப்பள்ள சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ வெங்கடேசனும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முதல்வர்.ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டா, அமைப்பு குழு செயலாளர் சந்தோஷ், மத்திய மந்திரி மேக்பால் ஆகியோரை சந்தித்து முதலமைச்சர். ரங்கசாமி மீது புகார் அளித்தனர்.

இதை அடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரனாவை நியமித்து கட்சி தலைமை குழுவை அனுப்பியது. புதுச்சேரி வந்த சுரனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ரகசிய ஆலோசனை கூட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அரசின் செயல்பாடு இதே நிலை நீடித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும். முதல்வர் ரங்கசாமி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கவில்லை இதற்கு தீர்வு காணவேண்டும் என திட்டவட்டமாக அறிவித்தனர்.

இதனால், பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவின் அனைத்து சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை கட்சி தலைமையிடம் தெரிவித்து முடிவு செய்வதாகவும் அதற்கு 10 நாட்கள் அவகாசம் தரும்படியும் பொறுப்பாளர் கேட்டு கொண்டார். இதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மேலிட பொறுப்பாளர் சுரானா டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இதன் பிறகே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் விவகாரத்தில் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும், பாஜகவை சேர்ந்த 7 பேரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ரங்கசாமிக்கு கடும் நெருக்கடி கொடுத்திருப்பதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

The post பாஜக எம்எல்ஏக்களிடம் முதல்வர் ரங்கசாமி பாகுபாடு காட்டுவதாக குற்றசாட்டு: புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி appeared first on Dinakaran.

Tags : PM ,Rangasami ,BJP ,Puducherry ,L. A. ,Chief Minister ,Rangasamy ,MP L. A. ,Namachiwai ,parliamentary ,
× RELATED பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால்...