திருப்பூர்: காங்கேயம் அருகே வீட்டின் மேல் கற்கள் விழுவதால் குட்டிச்சாத்தான் வீசுவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஒட்டபாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் பகுதியில் கற்கள் விழுந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக அச்சமடைந்தனர்.
மேலும், அருகில் இருந்த கருப்பராயன் கோவிலில் இரவில் தஞ்சமடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அச்சம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதம் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கேயம் தாசில்தார் மயில்சாமி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கற்கள் வீசப்படும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
The post காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும் கற்கள்; குட்டிச்சாத்தான் வீசுவதாக பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.