- அண்ணாமலை
- Edapadi
- சென்னை
- ஓ பன்னீர் செல்வம்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எடப்பாடி பழனிசாமி
- ஆதிமுகா
- தின மலர்
சென்னை: கட்சிக்கும், கூட்டணிக்கும் துரோகம் செய்தது யார் என்று அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் சுற்றிவளைத்து எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுக மூத்த தலைவர்களும் ஒருசேர பதிலடி கொடுத்து வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது அருகில் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்தார். ஆனால் டெல்லியில் இருந்து திரும்பி வந்த ஓரிரு நாளில் கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார். இதுதான் துரோகம். எடப்பாடி பழனிசாமி துரோக மனப்பான்மை கொண்டவர். யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை என்றும் பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். எடப்பாடியின் தவறான முடிவால்தான் அதிமுக பல இடங்களில் டெபாசிட் போனது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேநேரத்தில், இதுவரை எடப்பாடி பழனிசாமியை மட்டுமே குற்றம்சாட்டி வந்த அண்ணாமலை, முதல்முறையாக கூட்டணியில் இருந்து எடப்பாடி வெளியேறியது குறித்தும் விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைதான் துரோகத்தின் மொத்த உருவம். அவர் ஒரு பச்சோந்தி என்று பதிலுக்கு சாடினார். அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் அண்ணாவின் பெயரில் தொடங்கினார். அந்த அண்ணாவையே அவமானப்படுத்தியவர் அண்ணாமலை. நாங்கள் மானம், ரோசம் உள்ளவர்கள். அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றும் பழனிசாமி காட்டமாக கூறினார். அதோடு ஓ.பன்னீர்செல்வமும் கட்சிக்கு துரோகம் செய்தவர், அவர் என்றைக்குமே அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்றும் பழனிசாமி கூறினார். இப்படி எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒருவருக்கொருவர் யார் துரோகிகள் என பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது: துரோகத்தின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி, தன்னை விசுவாசமற்றவர் என்று கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது. அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை ஜெயலலிதாவே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். 2017ம் ஆண்டு ‘தர்ம யுத்தம்’ நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 சதவீத மக்கள் ஆதரவு இருந்தது. அப்போது கட்சியின் நலன் கருதி, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். எந்தக் காலத்திலும் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் நான் கேட்கவில்லை. இனியும் கேட்க மாட்டேன். பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து பெற்ற முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு தூது விட்டார்.
என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது, கட்சிக்கு நானும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும் என்று சமரசம் பேசினார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். ஆனால் அதற்கு மாறாக கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டுமென்ற நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி விதித்தார். அதிமுக நலன் கருதி அதனையும் ஏற்றுக் கொண்டேன். இது கட்சியின் மீது எனக்குள்ள விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு. பிரதமர் வலியுறுத்தியதால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன். ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்த ஏன் தயங்குகிறார்? இது மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில், அதிமுக ஒன்றுபட வேண்டும், இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், அதிமுக மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையை எந்தத் தொண்டனும், பொதுமக்களும் ஏற்காத நிலையில், பிளவுபட்டு கிடக்கும் அதிமுக இணைந்தால்தான் 50 ஆண்டிற்கும் மேலாக இயங்கி வரும் அதிமுக வலுப்பெறும். இதனை மனதில் வைத்துதான் அதிமுக இணைய வேண்டுமென்ற கருத்தினை வலியுறுத்தி வருகிறேன். இது பழனிசாமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் எனது கேள்வி. தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுகவை பலப்படுத்துதுவற்கு ‘பத்துத் தோல்வி’ பழனிசாமி பதவியிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை, அண்ணாமலையும் ஓ.பன்னீர்செல்வமும் சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக அதிமுக மூத்த தலைவர்களும் பேசி வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* விக்கிரவாண்டி தேர்தல் அன்புமணி ஷாக்
விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக, தேமுதிகவின் வாக்குகளை பெற பாமக அன்புமணி, ஜெயலலிதா படத்துடன் ஓட்டுக் கேட்டு வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பாமகவுக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்று ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனாலும் அன்புமணி, நேற்றுவரை எடப்பாடியை திட்டிவிட்டு விக்கிரவாண்டிக்காக அவரை விமர்சிக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது அன்புமணியின் கூட்டணியில் உள்ள பாஜவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் மோதல் எழுந்துள்ளது. இதனால் அன்புமணி கலக்கம் அடைந்துள்ளார். கோபத்தில் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, மாற்றிப்போட்டால் என்ன செய்வது என்று பீதியில் பாமகவினர் வலம் வருவதாக கூறப்படுகிறது.
The post யார் துரோகி? எடப்பாடியை சுற்றிவளைத்து தாக்கும் அண்ணாமலை, ஓபிஎஸ்: பதிலடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.