×

அமலாக்கத்துறை வழக்கில் வங்கி ஆவணங்களை கேட்டு செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தொடர்புடைய வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு அமலாக்கத்துறை வழங்க வேண்டும். அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரிய மனு மீதான செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதி கூறி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிகாணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது நீதிமன்ற காவலை ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை வழக்கில் வங்கி ஆவணங்களை கேட்டு செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,Enforcement Directorate ,Chennai Principal Sessions Court ,Chennai ,Minister ,Senthil Balaji ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு