×

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: வட சென்னையியில் மாதவரம், திருவொற்றியூர் போன்ற சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், உரத் தொழிற்சாலை போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களும், கனரக வாகனம், மோட்டார் பைக் மற்றும் ஸ்டீல் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.டி மற்றும் அதை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.  இவர்கள் பணியாற்றுவதற்கு வடசென்னை பகுதியில் ஐ.டி தொடர்பான நிறுவனங்கள் இல்லாததால், இவர்கள் தென் சென்னை மற்றும் வேறு மாவட்டங்களில் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு வெளி மாவட்டங்களில் சென்று பணிபுரிபவர்கள் வெகு தூரம் பயணித்து செல்ல வேண்டி இருப்பதுடன், கால விரயம், அலைச்சல் ஏற்படுகிறது.

இதன்காரணமாக, ஐ.டி தொடர்பாக படித்தவர்கள் பலர் அருகாமையில் உள்ள தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேறு பணிகளில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் வடசென்னை பகுதியில் ஐ.டி தொடர்பான பட்டப் படிப்பு படித்தவர்கள் பயன்பெறும் வகையில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஹைடெக் சிட்டியை உருவாக்க வேண்டும் என்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது கோரிக்கை விடுத்தார். மேலும் ஐ.டி. நிறுவனம் தொடர்பான துறைக்கும் அவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். எனவே மாதவரம் பால் பண்ணையில் ஐடி நிறுவனங்கள் செயல்பட ஹைடெக் சிட்டியை உருவாக்க வேண்டும், என்று குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கூறியதாவது: மாதவரம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, மற்றும் மாநகர போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு உள்ள இந்த பகுதியில் ஏராளமான இளைஞர்கள் ஐ.டி தொடர்பான பட்டப் படிப்பை படித்துவிட்டு, இங்கு ஐ.டி நிறுவனங்கள் இல்லாத காரணத்தால், வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை உள்ளது. எனவே, மாதவரம் பால் பண்ணையில் ஹைடெக் சிட்டியை உருவாக்க வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மாதவரத்தில் ஆவின் மற்றும் கால்நடை துறைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் காலி நிலங்கள் இருப்பதால், அதில் ஹைடெக் சிட்டியை உருவாக்குவதற்கும், அதை சிறப்பாக செயல்படுத்தவும் தேவையான வசதிகள் உள்ளது. பொதுமக்களில் கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,North Chennai ,Tiruvotiyur ,Thiruvotiyur ,
× RELATED மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில்...